அமெரிக்காவில் மோகன் பகவத் நிகழ்ச்சிக்கு மேயர் எதிர்ப்பு: பதிலடி கொடுத்த மேரி மில்பென்!

முதலாளித்துவ அமைப்பில் இயங்கும் மேடிசன் சதுக்க அரங்கம் சோசலிசக் கூச்சல்களுக்குச் செவிசாய்க்காது.
Mohan Bhagwat - Mary Millben   -Zohran Mamdani
Published on

நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானியின் கருத்துகளுக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் நிகழ்ச்சியை எதிர்ப்பது பிரதமர் மோடி மீதான வெறுப்பே என்று அவர் விமர்சித்துள்ளார்.

நியூயார்க் மேயரின் சர்ச்சை பேச்சு

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் சதுக்க மைதானத்தில் ஆகஸ்ட் 29 அன்று நடைபெறவுள்ள 'ஒன்றியக் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு நியூயார்க் மாநகராட்சியின் மேயர் ஜோஹ்ரன் மம்தானி எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் பிரிவினையைத் தூண்டுபவை, எனவே இந்த நிகழ்ச்சியை நான் எதிர்க்கிறேன். ஆனால் இது ஒரு தனியார் அரங்​கில் நடைபெறுவதால், இதை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை" எனத் தெரிவித்தார்.

மேரி மில்பெனின் காட்டமான பதிலடி

நியூயார்க் மேயரின் இந்த எதிர்ப்பிற்கு அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகப் பதிலளித்துள்ளார். "ஜோஹ்ரன் மம்தானி மற்றும் பிற சோசலிசவாதிகள் மோகன் பகவத்தின் நிகழ்ச்சியை எதிர்ப்பதற்கு உண்மையான காரணம், அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் எதிர்ப்பதுதான். முதலாளித்துவ அமைப்பில் இயங்கும் மேடிசன் சதுக்க அரங்கம் சோசலிசக் கூச்சல்களுக்குச் செவிசாய்க்காது.

மம்தானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் செய்ய விரும்பினால், முதலாளிகளாக மாறி பணம் திரட்டி, தனியாக ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்துத் தங்கள் விருப்பப்படி நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளட்டும்" என்று அவர் சாடியுள்ளார். மேலும், மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியின் 'ஒன்றியம்' என்ற தலைப்பைப் பாராட்டிய மில்பென், "நாம் அனைவரும் ஒரே குடும்பம், இந்த நிகழ்வு இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து பயனுள்ள உரையாடல்களை உருவாக்கும் என்று நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அரங்கில் தொடரும் விவாதம்

மேயர் மம்தானியின் கருத்துகளுக்குப் பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் மம்தானியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், மோகன் பகவத்தின் இந்த அமெரிக்கப் பயணம் சர்வதேச மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com