உலகின் மிகப்பெரிய காற்று மணியை அமைத்த அமெரிக்கர் - 12 கின்னஸ் சாதனைகளை படைத்தார்

குழாய் அமைக்கும் தொழிலில் ஏற்கனவே முன் அனுபவம் இருந்ததால், பெரிய காற்று மணியை உருவாக்க எளிதாக இருந்தது
Guinness Record Wind Chime
Published on
Summary

அமெரிக்காவை சேர்ந்த போலின் என்பவர் கேசி என்ற தனது கிராமத்தில் உலகின் மிகப்பெரிய காற்று மணி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து 12 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜிம் போலின்

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் நகரத்தில் உள்ள கேசி என்ற சிறிய கிராமத்தில் ஜிம் போலின் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த கிராமத்தில் 3,000 மக்கள் வாழ்ந்து வந்தனர்.

கேசி கிராமத்தில் போதுமான அளவில் மக்கள் வரவு இல்லாமல் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து போலினும் அவரது குடும்பத்தினரும் ஒரு தேநீர் கடையை திறந்தனர்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி, அந்த கிராமத்திற்கு போதுமான அளவில் மக்கள் வந்து செல்லவில்லை.

பிரம்மாண்டமான காற்று மணி

இதையடுத்து போலின் தனது பாட்டி முன்பு வைத்திருந்த சிறிய அளவிலான காற்று மணியை உதாரணமாக வைத்துக் கொண்டு, 2012-ஆம் அண்டு உலகின் மிகப்பெரிய காற்று மணி ஒன்றை உருவாக்கினார்.

போலினுக்கு குழாய் அமைக்கும் தொழிலில் ஏற்கனவே முன் அனுபவம் இருந்ததால், பெரிய காற்று மணியை உருவாக்குவதற்கு தேவையான பாகங்கள், அவரிடம் ஏற்கனவே இருந்தன.

போலின் தான் உருவாக்கிய காற்று மணியை, தனது கேசி நகரத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார். இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள், பல பிரம்மாண்டமான பொருட்களை சேர்க்க தொடங்கினர்.

மேலும் அந்த பகுதி நகர மக்கள், பிரம்மாண்டமான முட்கரண்டி, கோல்ஃப் ஆணி (Golf tee), தபால் பெட்டி, ஆடும் நாற்காலி, கோல்ஃப் பேட், முடி திருத்தும் கம்பம், ஏற்ற இறக்க பலகை மற்றும் பிற பொருட்களை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கினர்.

சுற்றுலா பயணிகளை ஈர்த்தது

அந்த மாதிரியிலான பொருட்கள் வெறும் அலங்கார பொருட்களாக இல்லாமல், அவை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.

போலின் உருவாக்கிய காற்று மணியில் காற்று அதன் வழியே உள்ளே செல்லும்போது, அது பிரம்மாண்டமாக ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அந்த நகரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்டமான தபால் பெட்டியில், ஒருவர் தபால் போடும்போது அதில் உள்ள கொடி உயர்ந்து மேலே செல்லும்படியும், பின்னர் தாழ்ந்து கீழே இறங்கும்படியும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதன்மூலம் பார்வையாளர்கள் அந்த நகரத்தில் வைக்கப்பட்ட பொருட்களை பார்த்து ரசிப்பது மட்டுமல்லாமல், அதன் அனுபவத்தை பெற்றனர்.

இதையடுத்து 2019-ஆம் ஆண்டு, கேசி நகரத்தில் உள்ள 6-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உலக சாதனை படைத்தன. இதைத்தொடர்ந்து ஒரு வார இறுதியில் அந்த பகுதிக்கு 1,500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

12 கின்னஸ் சாதனைகள்

போலின் 15 ஆண்டுகளில் உருவாக்கிய 21 வெவ்வேறு பொருட்களுக்காக, 12 கின்னஸ் உலக சாதனைகளை படைத்தார். அந்த பட்டியலில் 14.94 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய காற்று மணியும், 25.01 மீட்டர் நீளம் கொண்ட ஊஞ்சலும், 17.09 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய ஆடும் நாற்காலியும் இடம்பெற்றிருந்தன.

இந்த கின்னஸ் சாதனை குறித்து போலின் கூறும்போது, உலக சாதனைகள் தங்கள் கிராமத்தை மிகப்பெரிய அளவில் மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த மாற்றங்கள் ஒரே இரவில் நடந்துவிடவில்லை எனவும், இந்த முயற்சியை தொடங்க ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதரவும் தேவைப்பட்டதாகவும் போலின் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com