ஈரானுக்கு உதவியதாக இந்திய தொழிலதிபருக்கு அமெரிக்கா தடை

'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 ஸ்காட் பெசன்ட்
Published on: 
Summary

ஈரானுக்கு வர்த்தக ஆதரவு அளித்த நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

ஈரானுக்கு பொருளாதார மற்றும் வர்த்தக ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மற்றும் துருக்கி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

ஈரான் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

எண்ணெய் விற்பனை மூலம் ஈரான் பெறும் வருவாயைத் துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட, அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு தடை

அமெரிக்க கருவூலத் துறையின் தகவல்படி, இந்தியாவில் வசிக்கும் தொழிலதிபர் சுனில் குமார் சர்மா, அவரது மனைவி ஜஸ்பிரீத் பிரீத்தி ஷாஹித் மற்றும் மேலும் இரண்டு இந்தியக் குடிமக்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரானிய பெட்ரோலியப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்குப் போலி அடையாளங்களையும் கடல்சார் சான்றிதழ்களையும் வழங்கியதாக இந்த நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், சுனில் குமார் சர்மாவுடன் தொடர்புடைய மேலும் ஒன்பது நிறுவனங்களையும் அமைச்சகம் தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

யார் இந்த சுனில்?

சண்டிகரைச் சேர்ந்த சுனில் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி, கயானா, எஸ்வதினி மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளாக நடித்து, கப்பல்களுக்குப் போலிப் பதிவுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இதன் மூலம், ஈரானிய ராணுவ நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகளுக்காகப் பணியாற்றும் கப்பல்கள், சர்வதேசத் தடைகளைத் தவிர்த்துத் தங்கள் செயல்பாடுகளைத் தொடர முடிந்தது.

துருக்கி

மேலும், ஈரானின் தடைசெய்யப்பட்ட விமான நிறுவனங்களுக்கு தரைவழிச் சேவை மற்றும் பிற சேவைகளை வழங்கியதற்காக, துருக்கியை தளமாக கொண்ட ஃபுகோ கிரவுண்ட் சர்வீசஸ் இன்க். நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

ஈரான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் தப்ப மாட்டார்கள் என்றும், தரை, கடல் அல்லது வான் வழியாக ஈரானுக்கு உதவுபவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் எச்சரித்தார்.

X