

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை அதிகாரபூர்வமாக நீக்கியுள்ளது அமெரிக்கா.
14 ஆண்டுகால நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2024 டிசம்பரில் பஷர் அல் ஆசாத் ஆட்சியை கவிழ்த்ததன் மூலம் நிறைவடைந்தது.
பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் ஒரு சில வாரங்களில் பல நகரங்களை கைப்பற்றி இந்த ஆட்சிக் கவிழ்ப்பை சாத்தியப்படுத்தியது.
ஆசாத் அவருக்கு ஆதவளித்து வந்த ரஷியாவுக்கு தப்பியோடினார். அங்கு தற்போது அவரது இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றிய கிளர்ச்சி குழு தலைவர் அகமது அல் ஷரா சிரியாவின் அதிபரானார்.
போர் நிறைவடைந்ததால் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களும் சொந்த மண்ணுக்கு திரும்ப தொடங்கினர்.
உள்நாட்டு போரின் பொருளாதார தாக்கத்தில் இருந்து சிரியா மெல்ல மீண்டு வரும் முயற்சியில் உள்ளது. அல் ஷரா அரசுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஏனெனில் முந்தைய ஆட்சியாளர் பஷர் அல் ஆசாத் ரஷியாவின் ஆதரவாளர் என்பதால்..
அவரின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு மறைமுக ஆதரவை அமெரிக்கா வழங்கி வந்திருக்கிறது. தனக்கேற்ற வகையில் புதிய அரசு அமைந்த பின் அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கி வருகிறது.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு சிரியா அதிபர் - அல் ஷரா கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்தார்.
1979 முதல் சிரியா, அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் உள்ளது. அப்போது பஷர் அல் ஆசாத்தின் தந்தை ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சியில் இருந்தார்.
அவர் ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்கா சிரியாவை அந்த பட்டியலில் சேர்த்தது. அவருக்கு பின் அவரது மகன் பஷர் அல் ஆசாத் ஆட்சிக் காலத்திலும் சிரியா அந்த பட்டியலில் நீடித்தது.
இந்த சூழலில் 2024 இல் ஆட்சி மாற்றம் நடந்து அங்கு சாதகமான அரசு உருவாகியுள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அந்நாட்டை நீக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூலையில் அந்நாட்டின் பாராளுமன்ற அமைப்பான காங்கிரஸ் முன் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
45 நாட்கள் காங்கிரஸ் பரிசீலனைக்கு பின் இது அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து சிரியா முற்றிலும் விலகி நிற்கும் என அதிபர் அகமது அல்ஷரா அளித்த உறுதிமொழிகள் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் போரின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வரவும், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் இத்தீர்மானம் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என சிரிய அரசு கருதுகிறது.
அமெரிக்காவின் இந்நடவடிக்கையை வரவேற்ற சிரிய அதிபர் அகமது அல் ஷரா தன் சமூக வலைத்தளத்தில், வேதனை நிறைந்த பழைய காலம் முடிவுக்கு வந்து, வளர்ச்சியும் மறுசீரமைப்பும் கொண்ட புதிய உலகிற்குள் நாடு நுழைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத ஆதரவு பட்டியல்லில் இருந்ததால் சிரியாவிற்கு வெளிநாட்டு உதவிகள், பாதுகாப்பு ஏற்றுமதிகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் பெருமளவில் தடைபட்டிருந்தன.
கடந்த ஆண்டு தடைகளில் தளர்வுகள் வந்த பிறகும், இந்தப் பட்டியலில் பெயர் இருந்ததால் வங்கிகளும் முதலீட்டாளர்களும் சிரியாவில் முதலீடு செய்யத் தயங்கினர்.
இந்நிலையில் சிரியா அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அல் ஷராவின் அமைப்பும் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.