321 வைரங்கள் பதித்த மோதிரம்.. பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு வந்த பரிசு - உடனே ரத்தான வைர இறக்குமதி வரி - சர்ச்சை

321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம்.
டிரம்புக்கு வைர மோதிரம்  பரிசு
டிரம்புக்கு வைர மோதிரம் பரிசு
Published on

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வைர வர்த்தக அமைப்பான ஆண்ட்வெர்ப் வேர்ல்ட் டைமண்ட் சென்டர் (AWDC) மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோரால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பரிசளிக்கப்பட்ட வைர மோதிரம் மற்றும் அதைத் தொடர்ந்து ஐரோப்பிய வைரங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரிசு

AWDC செய்தி குறிப்பின்படி, அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், 321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு வழங்கப்பட்டது.

இதன் மதிப்பு 25,000 முதல் 35,000 டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரிவிலக்கு

இந்த பரிசு வழங்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஜூலை 24 அன்று, ஐரோப்பிய இயற்கை வைரங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு முழு வரி விலக்கு அளித்தது.

இந்த வரிவிலக்கு மூலம் பெல்ஜியம் வைர வணிகர்கள் ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் வரியை சேமிக்க முடியும்.

அரசியல் சர்ச்சை

அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோர், இந்த விலையுயர்ந்த பரிசு வரி விலக்கு பெறுவதற்காக அளிக்கப்பட்ட லஞ்சமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெளிநாட்டு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளிடமிருந்து அனுமதியின்றி பரிசுகளைப் பெறுவது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

இதனை சுட்டிக்காட்டி இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். இருவரும், பெல்ஜியம் வைர வர்த்தக அமைப்பான AWDC ற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.

விளக்கம்

ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, இந்த குற்றச்சாட்டுகளை AWDC முற்றிலும் மறுத்துள்ளது.

இந்த மோதிரம் அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்றும், வரி விலக்கு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், இந்த வரி விலக்கு அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்றும், எந்தப் பரிசும் இந்த முடிவை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com