

நேபாள வெள்ள மீட்பு பணிகளுக்காக அமெரிக்கா சார்பில் சுமார் ரூபாய் 310 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அரசியல் விவாகரங்களுக்கான துணை செயலாளர் அலிசன் ஹூக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று இமயமலையில் உள்ள லாங்டாங் லிருங் பனிப்பாறையில் ஏற்பட்ட எதிர்பாரா வெள்ளம், திரிசூலி மற்றும் போதேகோஷி நதிப் படுகைகளில் இருந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தையும் வாரி சுருட்டி அடித்துச்சென்றது.
இந்த விபத்தில் சுமார் 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 6,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
இதையடுத்து நேபாளத்திற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் உதவியை வழங்கின. இந்த நிலையில் நேபாள பேரிடர் மீட்பு பணிகளுக்காக சுமார் 310 கோடி (31 மில்லியன் டாலர்) மதிப்பிலான நிவாரண உதவித் தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நிவாரண தொகையானது, பேரிடர் மீட்பு ட்ரோன்களுக்காக 130 கோடி ரூபாயும், கட்டப்படும் நிரந்தர பாலங்களுக்காக 100 கோடி ரூபாயும், மேலும் 80 கோடி ரூபாய் அத்தியாவசியமான நீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதரங்களுக்காகவும் பயன்படும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் கடந்த புதன்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் அலிசன் ஹூக்கர், நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசர் கானலை நேரில் சந்தித்தார்.
இதையடுத்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல்போன சுமார் 70 அமெரிக்கர்களின் குடும்பத்திற்கும் அமெரிக்கா அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் அவர், மிகவும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் உதவிகளை கண்டறிந்து வழங்குவதற்காக, அமெரிக்கா நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் தெரிவித்தார்.