உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு தடை விதிக்க ஐ.நாவில் தீர்மானம் - எதிராக வாக்களித்த இந்தியா

133 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
மரண தண்டனைக்கு தடை விதிக்க ஐ.நாவில் தீர்மானம்
Published on: 
Summary

மரண தண்டனைக்கு உலகளாவிய தடை விதிக்கக் கோரும் ஐநா தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

மரண தண்டனைக்கு உலகளாவிய தடை விதிக்க கோரி ஐக்கிய நாடுகள் பொது சபையில் மெக்சிகோவால் தீர்மானம் முன்மொழியப்பட்டது. 133 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.

ஆனால் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா உட்பட 33 நாடுகள் அதை எதிர்த்து வாக்களித்தன. 16 நாடுகள் வாக்களிக்கவில்லை

ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பாவிகா மங்கலானந்தன் இதுகுறித்து நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

இந்தியாவில் மரண தண்டனை

அவர் பேசியதாவது, "ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் அதன் சொந்த சட்ட அமைப்பு மற்றும் பொருத்தமான தண்டனைகளை தீர்மானிக்க முழு உரிமை உண்டு.

இந்தியாவில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மற்றும் விரிவான பாதுகாப்புகளை உறுதி செய்த பின்னரே, அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

சட்டப்பூர்வ விசாரணைக்குப் பிறகு விதிக்கப்படும் மரண தண்டனையை, அநியாயமான கொலைகள் அல்லது சித்திரவதைகளுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது." என தெரிவித்தார்.

கடுமையான குற்றங்களுக்கான தண்டனைகள் சொந்த சட்டங்களின்படியும், நீதித்துறை மறுஆய்வின் மூலமாகவும் மட்டுமே நிறைவேற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

X