

இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒடுக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அதற்கு இந்தியா எதிர்வினை ஆற்றியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர் செயல்முறையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நேற்று டெல்லியில் சி.ஜே.பி. மற்றும் பிற அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 7000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் நேஹா போரா ஆகியோரும் அடங்குவர். இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்ட சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் பல நிர்வாகிகள் இன்னும் காவலில் உள்ளனர்.
இதனிடையே தடுத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாகவும், அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் விடுவிக்கப்பட்டதாகவும், பலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
"டெல்லியில் போராட்டங்களுக்கு முன்னும் பின்னும் போராட்டக்காரர்கள், தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டதாக வரும் அறிக்கைகள் எங்களுக்குக் கவலையளிக்கின்றன.
அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமையை அதிகாரிகள் முழுமையாக மதிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள், அவசியம் மற்றும் விகிதாசாரம் ஆகிய கடுமையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நாட்டின் ஜனநாயக மரபுகள் மற்றும் மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க, சட்ட அமலாக்க முகமைகள் அமைதியான போராட்டக்காரர்களிடம் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய, அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐநாவின் அறிக்கைக்கு ஐநா தலைமையகம் அமைந்துள்ள ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் எதிர்வினை ஆற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
அந்த அறிக்கையில், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். இங்கு அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமை நமது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வலுவான நிறுவனங்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் இந்த உரிமையைப் பாதுகாக்கின்றன.
ஒவ்வொரு ஜனநாயக நாட்டையும் போலவே, இந்தியக் குடிமக்களும் பொது ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர்.
அதிகாரிகள் சட்டத்திற்கு இணங்கவே செயல்படுகின்றனர். மேலும், எந்தவொரு புகாரையும் விசாரிப்பதற்கு நமது அனைத்து நீதிமன்றங்களும் உள்ளன
பாரபட்சமின்றியும் பாகுபாடின்றியும் செயல்பட வேண்டும் என்ற தனது கடமையை மனித உரிமைகள் ஆணையம் மனதில் கொள்ள வேண்டும்.
மற்ற இடங்களில் நடைபெறும் பெரிய அளவிலான போராட்டங்களுக்கும் ஆணையம் சமமான கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.