

சவுதி அரேபியாவில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான இடையூறுகள் ஏற்பட்டதாக வந்த செய்திகளை தொடர்ந்து, கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரியாத்திற்கு இயக்கப்பட இருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இரவு 7.55 மணிக்கு புறப்பட இருந்த ஆகசா ஏர் விமானம் QP523 மற்றும் இரவு 9.40 மணிக்கு புறப்பட இருந்த சவுதியா விமானம் SV775 ஆகியவையே ரத்து செய்யப்பட்ட சேவைகள் என கொச்சி சர்வதேச விமான நிலைய லிமிடெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த இரண்டு விமானங்களிலும் முன்பதிவு செய்த பயணிகள், மேலதிக தகவல்கள் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகளுக்காக அந்தந்த விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு உட்பட, ரியாத்தில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, கண்ணூரில் இருந்து ரியாத் நோக்கி சென்ற ஒரு விமானம் புறப்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரும்பி சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ரியாத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சுமார் 180 பயணிகளுடன் கண்ணூரில் இருந்து மாலை 5 மணியளவில் புறப்பட்டது.
இருப்பினும், அது திரும்பி வந்து இரவு 7.30 மணியளவில் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரியாத்துக்கு செல்லும். மேலும் அங்கிருந்து வரும் விமான சேவைகளை அக்டோபர் 10 வரை ரத்து செய்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, பயணத்தை ரத்து செய்தால் இலவசமாக மாற்று ஏற்பாடு அல்லது முழு பணமும் திரும்ப வழங்கப்படும். நாங்கள் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்," என்றார்.
அண்டை நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், விமான நிலையத்தின் மீதான புதிய தாக்குதலுக்கு பொறுப்பேற்று, ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையால் சேதம் ஏற்பட்டதாக கூறினர்.