

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவர் பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி வரிகளை விதித்ததால் அவற்றை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ஆனாலும் டிரம்ப் வேறு வழிகளில் வரி விதிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மானியங்கள் மூலம் கூடுதல் உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறி இந்தியா உள்பட 16 நாடுகள் மீது 25 சதவீத புதிய வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்து உள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த 3-ந்தேதி நடந்த பாராளுமன்றத்துக்கான இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று இரு அவைகளை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் வருகிற ஜனவரி மாதம், பாராளுமன்றம் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது.
இது அதிபர் டிரம்புக்கு பின்னடைவாக அமையும். அவர் பரிந்துரைக்கும் மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
இந்தநிலையில் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் என்று பாராளுமன்ற ஆசிய பசிபிக் அமெரிக்கக் குழுவின் தலைவரும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான கிரேஸ் மெங் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
டிரம்பின் பொறுப்பற்ற வர்த்தகப் போர்கள், அமெரிக்காவில் 30 லட்சம் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகளுக்கு சொந்தமான வணிகங்களை கடுமையாகப் பாதித்துள்ளன.
அன்றாடப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் மீதான வரிகள், குடும்பங்கள், நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்களுக்குக் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தி உள்ளன.
இது மக்களின் வாழ்க்கையை மிகவும் செலவு மிக்கதாக ஆக்கியுள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற ஆசிய பசிபிக் அமெரிக்கக் குழுவின் உறுப்பினர்கள், அரசியலமைப்பின் முதல் பிரிவின் கீழ் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான பாராளுமன்ற அதிகாரத்தை மீட்டெடுத்து, இந்த அதிக செலவுமிக்க வரிகளை முடிவுக்குக் கொண்டுவரப் பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.