

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் ஒன்டாரியோ ஏரியை, ‘அமெரிக்கா ஏரி’ என பெயர் மாற்றம் செய்து அறிவித்ததை தொடர்ந்து, இந்த புதிய பெயர் மாற்றத்தை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் அப்டேட் செய்த நிலையில், ’ ‘மேப்குவெஸ்ட் நிறுவனம்’ இந்த புதிய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த ஒப்பந்தத்தை கனடா நிராகரித்தது.
இதையடுத்து ஒண்டோரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என பெயர் மாற்றம் செய்யுமாறு ஆகஸ்ட் 27 என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள், இந்த பெயர் மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்களது தளத்தை புதுப்பித்தது.
இதற்கிடையில் அமெரிக்காவை சேர்ந்த மேப்குவெஸ்ட் என்ற நிறுவனம், இந்த பெயர் மாற்றத்தை தங்களது தளத்தில் புதுப்பிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேப்குவெஸ்ட் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாங்கள் ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்றப் போவதில்லை. உங்கள் விருப்பப்படி அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள்.
எங்கள் வரைபடத்தில் ஒன்டாரியோ ஏரி சரியாகவே குறிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அறிவித்தது.
இதையடுத்து ஆகஸ்ட் 28 அன்று அமெரிக்க ஆப் ஸ்டோரில் 128-வது இடத்தில் இருந்த மேப்குவெஸ்ட் நிறுவனம் ஒரே நாளில் 92-வது இடத்திற்கு முன்னேறியது.
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 31 அன்று, மேப்குவெஸ்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3-வது இடத்திற்கு முன்னேறி, புதிய இடங்களை மேப் செயலிகளில் தேடுபவர்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தது.
இந்த மேப்குவெஸ்ட் செயலி அமெரிக்காவில் சுமார் 6,32,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாக, தனியார் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவில் மொத்த பதிவிறக்கங்கள் 15 லட்சத்தை தாண்டியுள்ளதாக மேப்குவெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேப் குவெஸ்ட் நிறுவனம் உலகம் முழுவதும் பயனர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அதன் பொது மேலாளர் டக் பெர்கர் கூறுகையில், “மக்கள் எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், எங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அளவுக்கு அக்கறை காட்டுகிறார்கள்.
சமூக வலைதளங்களில் எங்கள் செயலி குறித்து, பயனர்கள் புதிய அம்சங்களுக்கான கோரிக்கைகளையும், மாற்றம் செய்ய வேண்டிய சில விஷயங்களையும் சமர்ப்பித்து வருகிறார்கள்.
மக்கள் கேட்கும் அம்சங்களை உருவாக்குவதற்காக எங்கள் குழு இரவு பகலாக உழைத்து வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.