டிரம்பிற்கு ஜாலிபீ சிக்கன் விருந்து வழங்கிய பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர்!

ஆஸ்திரேலியாவில் பல புதிய கிளைகளைத் தொடங்க உள்ள இந்நிறுவனம், அங்குள்ள பிலிப்பைன்ஸ் வம்சாவளி மக்களிடையே பெரும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பாராட்டினார்.
Jollibee chicken
Published on: 
Summary

ஆசியப் பயணமாக மிலினா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, அந்நாட்டின் பிரபல ஜாலிபீ ஃபிரைட் சிக்கனை இரவு நேரச் சிற்றுண்டியாக வழங்கி பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் சிறப்பித்துள்ளார். சர்வதேச அரசியல் தலைவர்கள் மத்தியில் உணவு முறைகளைக் கொண்டு உறவை வலுப்படுத்தும் 'ஜாலிபீ ராஜதந்திரம்' தற்போது உலகளாவிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய உள்நாட்டு துரித உணவுச் சங்கிலியான 'ஜாலிபீ', அந்நாட்டின் கலாச்சார அடையாளமாகவும் உலகளாவிய பிராண்டாகவும் திகழ்கிறது. பிலிப்பைன்ஸுக்கு வருகை தந்த அதிபர் டிரம்பிற்கு மணிலாவின் உண்மையான சுவையை வழங்கும் நோக்கத்துடன் அதிபர் மார்கோஸ் இந்தச் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளார். கடினமான உழைப்பை வழங்கிவரும் அமெரிக்க அதிபருக்கு கூடுதல் ஆற்றலை வழங்கும் வகையில் இந்தச் சிற்றுண்டி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள கேஎப்சி நிறுவனத்தின் பிரபலத்தை விடத் தங்கள் நாட்டின் ஜாலிபீ நிறுவனம் அதிக புகழ் பெற்றுள்ளதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டதைக் கேட்ட டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உலகளாவிய வளர்ச்சிப் பயணம்

1970-களில் மணிலாவில் ஒரு சிறிய ஐஸ்கிரீம் கடையாகத் தொடங்கப்பட்டு, பின்னர் துரித உணவு விற்பனைக்கு மாறிய ஜாலிபீ நிறுவனம், இன்று உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் உணவகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பர்கர்கள், பிரெஞ்ச் ஃபிரைஸ் மற்றும் 'சிக்கன்ஜாய்' ஃபிரைட் சிக்கன் உள்ளிட்டவை உலகம் முழுவதும் உள்ள துரித உணவு விரும்பிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றன. குறிப்பாக, இனிப்புச் சுவை கொண்ட ஸ்பாகெட்டி போன்ற பிலிப்பைன்ஸ் பாரம்பரியச் சுவைகளும் இதன் சிறப்பம்சங்களாகும். தற்போது 17 நாடுகளில் 1,600-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கிவரும் இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளிலும் வட அமெரிக்காவிலும் வேகமாக விரிவடைந்து வருகிறது.

உணவு சுற்றுப்பயணம்

சர்வதேச தலைவர்களுடனான சந்திப்புகளில் ஜாலிபீ உணவுகள் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டிற்காக வருகை தந்த ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அங்குள்ள ஜாலிபீ உணவகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். ஆஸ்திரேலியாவில் பல புதிய கிளைகளைத் தொடங்க உள்ள இந்நிறுவனம், அங்குள்ள பிலிப்பைன்ஸ் வம்சாவளி மக்களிடையே பெரும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பாராட்டினார். அதேபோல், கடந்த ஜூலை மாதம் கனடா பிரதமர் மார்க் கார்னியும் வன்கூவரில் உள்ள ஜாலிபீ கிளைக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

X