ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: அதிபர் டிரம்ப் அதிரடி

ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதற்கு எதிரான தனது நிர்வாகத்தின் நிலைப்பாட்டை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
Donald Trump
அதிபர் டிரம்ப்
Published on: 

ஹார்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்காவுக்கு "முழுமையான கட்டுப்பாடு" இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். மேலும், அமெரிக்க கடற்படை ஜலசந்தியில் முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதையோ அல்லது குண்டை உருவாக்குவதையோ அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் மீண்டும் கூறினார்.

"கடந்த வாரம், நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து சாதனை அளவிலான எண்ணெயை வெளியேற்றினோம். எங்கள் கடற்படை ஒரு முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது எங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது," என்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறினார்.

டிரம்ப் திட்டவட்டம்:

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் அனைத்து கப்பல்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையெனில் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதற்கு எதிரான தனது நிர்வாகத்தின் நிலைப்பாட்டை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். அத்தகைய திறன்களை ஈரான் வளர்த்துக் கொள்ள அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

அனுமதிக்க மாட்டோம்:

ஈரான் கதிரியக்க அணுகுண்டை உருவாக்கி வருவதாக வரும் செய்திகள் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த டிரம்ப், அந்நாட்டில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்கா அறிந்திருப்பதாகவும், அத்தகைய ஆயுதத்தை ஈரான் தொடர அனுமதிக்காது என்றும் கூறினார்.

"ஈரானில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு நிறைய தெரியும். அவர்கள் சொல்வதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர்கள் யார், எங்கே இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதைக் கண்டுபிடிப்போம். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று அவர் மேலும் கூறினார்.

X