

அதிபர் டிரம்பின் இந்த உரிமை கோரல் சர்வதேச விண்வெளி உடன்படிக்கைகளுக்கு மாறானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ‘டுரூத் சோஷியல்’ மூலம் வெளியிடும் அறிக்கைகள் உலகளவில் தொடர்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பூமியின் இயற்கை செயற்கைக்கோளான நிலவு அமெரிக்காவுக்கே சொந்தம் எனக் கூறிப் பதிவிட்டுள்ள கருத்து, சர்வதேச அரசியலிலும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளிடையேயும் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டிரூத் சோஷியல் தளத்தில் நிலவின் பெரிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த டிரம்ப், அதன் பின்புலத்தில் பூமி மற்றும் அமெரிக்கக் கொடி தெரியுமாறு அமைக்கப்பட்ட படத்துடன் “நிலவு நமக்குச் சொந்தமானது” என்ற வாசகத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்த உரிமை கோரல் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படாதபோதிலும், அமெரிக்காவின் எல்லை விரிவாக்கம் மற்றும் இறையாண்மையைக் காட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
நிலவு குறித்த பதிவைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளிப் படையினருக்கு புதிய சீருடை வடிவமைப்பையும் டிரம்ப் வெளியிட்டார். சாம்பல் மற்றும் கருப்பு நிறக் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடை, ‘ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ்’ திரைப்பட பாணியில் மிகவும் நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விண்வெளி எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிரம்பின் இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை சமூக வலைதளப் பக்கம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதில் டிரம்ப் ‘கிரீன் லேந்தர்ன்’ எனும் பிரபல காமிக்ஸ் சூப்பர்ஹீரோ போன்று, கையில் மின்னும் பச்சைக் கல் மோதிரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். அந்த வீடியோவில், "ஒளிமயமான பகலிலும், இருண்ட இரவிலும், எந்த ஒரு தீமையும் என் பார்வையிலிருந்து தப்ப முடியாது" என்ற சூப்பர்ஹீரோ வசனமும் இணைக்கப்பட்டிருந்தது.
அதிபர் டிரம்பின் இந்த உரிமை கோரல் சர்வதேச விண்வெளி உடன்படிக்கைகளுக்கு மாறானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1967-ஆம் ஆண்டைய பன்னாட்டு ‘வெளி விண்வெளி ஒப்பந்தத்தின்’ படி, நிலவு மற்றும் பிற விண்வெளிப் பொருட்கள் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கும் சொந்தமானதாக உரிமை கொண்டாட முடியாது. அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், டிரம்பின் இந்த சமூக வலைதளப் பதிவு வெறும் அரசியல் உத்தியா அல்லது கொள்கை முடிவா என்பது குறித்த விவாதங்கள் உலக அரங்கில் தீவிரமடைந்துள்ளன.