

ஈரான் போர் இடைக்காலத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார். எட்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போரின் விளைவாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது, இது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தப் போர் தவிர்க்க முடியாத ஒன்று என்று அவர் கூறினார். "ஈரான் விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது, அதை தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறோம்" என்று செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
போர் குறித்த வாக்காளர்களின் அதிருப்தி நிலவினாலும், பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத்தை மாற்றும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவர் "சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என்றும் அதிபர் கூறினார்.
முன்னதாக, ஜனநாயக கட்சியினருடன் இணைந்து பணியாற்ற தயார் என்று சமரச போக்கை வெளிப்படுத்திய அவர், அதே சமயம் அவர்களின் திட்டங்களை தடுக்க அதிபருக்கான 'வீட்டோ' (மறுப்பு) அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று எச்சரித்தார்; இது எதிர்காலத்தில் அரசியல் முடக்கத்திற்கு வழிவகுக்கக்கூடும்.
"அடுத்த இரண்டு ஆண்டுகள் முழுவதும் எல்லாவற்றிற்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, சும்மா அமர்ந்திருக்க நான் விரும்பவில்லை" என்று அவர் 'பொலிடிகோ' ஊடகத்திடம் கூறினார்.
ஆனால், குடியரசு கட்சியினருக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகவும் தீவிரமானதாக இருந்தது, இது வெறும் தொடக்கம் மட்டுமே.
வெள்ளை மாளிகையில் டிரம்பிற்கு அடுத்த வாரிசாகக் கருதப்படும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரான் விவகாரத்தில் அதிபர் மேற்கொண்ட போரே குடியரசுக் கட்சியினரின் இடைக்கால தேர்தல் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.