

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஏபெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மூன்று வல்லரசுகளின் தலைவர்களும் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பேசிய டிரம்ப், "நாம் மூவரும் விவாதிக்க வேண்டியவை ஏராளம், மேலும் நாம் ஏற்கெனவே நிறையப் பேசியிருக்கிறோம்.
உலகின் மூன்று மிகப்பெரிய நாடுகளின் அதிபர்கள் என்ற முறையில், நமது சொந்த மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையான அர்த்தமுள்ள உரையாடலைத் தொடர வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
உலக அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்க அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஒத்துழைப்புடன் செயல்பட்டாக வேண்டும்.
நாடுகள் தங்களின் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளவும், பாதுகாப்பான எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளைத் தேடவும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.
கடந்த காலத் தலைவர்கள், தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்த நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளனர். நாம் இதற்கு முற்றிலும் நேர்மாறாகச் சிந்திக்கிறோம்." என்றார்.
மேலும் அணு ஆயுதங்களை நாடுகள் அவற்றை கைவிடுவது சாத்தியமற்றது என்று கூறிய டிரம்ப், அணு ஆயுதக் குறைப்பின் சிரமத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பேசிய புதின், "ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பின் மூலம் ரஷியா, சீனா மற்றும் அமெரிக்கா உலகளாவிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த முடியும்.
அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு மூன்று நாடுகளுக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
பேச்சுவார்தையில் ஜி ஜின்பிங், "முக்கிய நாடுகளுக்கு இடையேயான ஆரோக்கியமான உரையாடல் மிகவும் அவசியம்.
பெரும் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், உலகம் குழப்பத்தில் மூழ்கும். வல்லரசுகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படும்போது மட்டுமே அமைதி நிலவும்.
அணு ஆயுத போரில் வெற்றி பெற முடியாது, அதை நடத்தவும் கூடாது. அதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார்.
மேலும் சீன-அமெரிக்க உறவுகளில் எந்தவொரு பெரிய பின்னடைவையும் தவிர்க்க, தைவான் விவகாரத்தில் அமெரிக்கா சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் கூறினார்.