ஹூலா ஹூப் - தந்தையுடன் இணைந்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி!

சிறுமி 10 முறை வளையத்திற்குள் குதித்தார் ஆனால், 1 முறை வளையம் சரியாக உருளாததால் 9 முறை என கின்னஸ் நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது.
HulaHoop - GuinnessWorldRecord
Published on: 
Summary

அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளரான டேவிட் ரஷ் , தனது 3 வயது மகள் பெலிசிட்டியுடன் இணைந்து ஹூலா ஹூப் வளையத்திற்குள் குதிக்கும் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.

மகளின் உலக சாதனை ஆசை

ஏற்கனவே தனது மூத்த மகன்களுடன் இணைந்து பல கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ள டேவிட் ரஷை பார்த்து, அவரது 3 வயது மகள் பெலிசிட்டியும் தனக்கென ஒரு உலக சாதனையைப் படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

பல வருடங்களாகத் தனது தந்தை பயிற்சி எடுப்பதை உன்னிப்பாகக் கவனித்து வந்த பெலிசிட்டி, பென்சில்களைக் கோப்பையில் போடுவது, டாய்லெட் பேப்பர்களை அடுக்குவது எனப் பல பயிற்சிகளைச் செய்து பார்த்துள்ளார். ஆனால், எதுவும் உலக சாதனை அளவிற்கு அமையவில்லை.

இறுதியாக, 30 வினாடிகளில் தரைவழியாக சுழன்று வரும் ஹூலா ஹூப் வளையத்திற்குள் அதிக முறை குதித்து கடக்கும் சாதனையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இதற்கு முன்னதாக 8 முறை குதித்ததே சாதனையாக இருந்தது.

விடாமுயற்சி பயிற்சி

3 வயதுக் குழந்தைக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சி அளிப்பது எளிதான காரியம் அல்ல என்பதால், பெலிசிட்டி எப்போதெல்லாம் விரும்புகிறாளோ அப்போதெல்லாம் டேவிட் அவளுக்குப் பயிற்சி அளித்துள்ளார். குழந்தை என்பதால் அவளை வற்புறுத்தாமல், அவளது ஆர்வத்திற்கு ஏற்பவே பயிற்சிகள் திட்டமிடப்பட்டன.

பல கட்டப் பயிற்சிகளுக்குப் பிறகு, இந்த தந்தை-மகள் ஜோடி தங்களின் அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனை முயற்சியைத் தொடங்கியது. இதில் சிறுமி பெலிசிட்டி 10 முறை வளையத்திற்குள் குதித்துக் கடந்து அசத்தினார். இருப்பினும், அதில் ஒரு முறை வளையம் குறிப்பிட்ட தூர உருளாததால் கின்னஸ் நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது.

இறுதியாக, 9 முறைகள் வெற்றிகரமாகக் கணக்கிடப்பட்டு, முந்தைய சாதனையான 8 முறையை முறியடித்து புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.

குடும்பமே கொண்டாடிய கின்னஸ் சான்றிதழ்

இதுகுறித்து டேவிட் ரஷ் இணையத்தில் பகிர்ந்துள்ளதாவது, "அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழ் வரும் வரை இந்த கொண்டாட்டத்தை நாங்கள் ரகசியமாகவே வைத்திருந்தோம்.

சில வாரங்களுக்குப் பிறகு சான்றிதழ் தபாலில் வந்தபோது, என் மனைவி மற்றும் மூத்த மகன்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பெலிசிட்டியின் சான்றிதழையும் சேர்த்து வழங்கினேன்.

ஒரே நாளில் என் மூன்று குழந்தைகளும் தங்களின் முதல் அதிகாரப்பூர்வ உலக சாதனைச் சான்றிதழ்களைக் கைகளில் ஏந்திய தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com