

பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும், ஈரான் போர் நீடிப்பதற்கு ஜனநாயக கட்சியினரே காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடைக்காலத் தேர்தலில், அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றது.
குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 258 இடங்களை வென்றுள்ளனர். இது கடந்த 30 ஆண்டுகளில் அவர்கள் பெற்ற மிகப்பெரிய பெரும்பான்மையாகும்.
இந்தத் தோல்விக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியைத் தாக்கி வருகிறார்.
தற்போது, ஜனநாயகக் கட்சியினரின் வெற்றிக்குப் பிறகு ஈரான் மேலும் ஆக்ரோஷமாகிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, "அனைவருக்கும் நினைவிருக்கும், நவம்பர் 3 இடைத்தேர்தல்கள் குறித்து நான் இரண்டு விஷயங்களைக் கூறினேன்.
முதலாவதாக, ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றால், பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடையும், அதுவேதான் நடந்தது.
இரண்டாவதாக, இதுவரை 81,000 போராட்டக்காரர்களை (ஈரான் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர், இவாண்டு ஜனவரியில் போராடிய ஈரான் மக்களை) கொன்ற ஈரான், தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும். அதுவேதான் நடந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், கடந்த ஆண்டை விட ஈரான் அதிக ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.
கவலைப்பட வேண்டாம், அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன, எந்த சேதமும் ஏற்படவில்லை.
ஈரானின் தலைவர்கள் ஜனநாயகக் கட்சியினரை பலவீனமானவர்கள், திறமையற்றவர்கள் மற்றும் அழிவுகரமானவர்கள் என்று கருதுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் முடிந்தவரை எண்ணெய் விலையை உயர்வாக வைத்திருக்க தங்களால் இயன்ற அனைத்தையும் முயற்சித்தனர், ஆனால் தேர்தலுக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துவிட்டன.
வருந்தத்தக்க வகையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு முன்பு இதை புரிந்து கொள்ளவில்லை, இந்தத் தேர்தல் முழுவதும் மிகவும் விசித்திரமாக இருந்தது. இறுதியில், அமெரிக்கா வெற்றி பெறும். " என்றார்.