என் மலர்
உலகம்

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்பட்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்!... பலன்கள் என்ன?
- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இறுதியாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருவருக்கும் இடையே ஒரு பெரிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் ரிசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான குறைந்தபட்ச வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
இதுவரை கண்டிராத மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 15 சதவீத வரி விதிக்கும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிலிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் மேலும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க இராணுவ தயாரிப்புகளையும் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர் உர்சுலா, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அமெரிக்காவிடமிருந்து எல்என்ஜி, எண்ணெய் மற்றும் அணு எரிபொருளை வாங்குவோம் என்று அவர் கூறினார். இந்த கொள்முதல்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறும் என்று அவர் கூறினார். ரஷிய எரிபொருட்களிலிருந்து பிற ஆதாரங்களுக்கு மாறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
விமானங்கள், சில வகையான இரசாயனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் பிற முக்கியமான மூலப்பொருட்களுக்கு இருதரப்பு வரிச் சலுகைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சுமார் 1.6 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






