

வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தென்அமெரிக்க நாடான வெனிசுலாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் முற்றுகையிட்ட அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது.
அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்தியுள்ளது.
வெனிசுலாவிடம் 303 பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இது உலகளாவிய எண்ணெய் இருப்புகளில் சுமார் 17% ஆகும்.
இடதுசாரியான மதுரோ அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றதுமே அமெரிக்காவின் இந்த செயலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
மதுரோவுக்கு பதில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அவர் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். மேலும் வெனிசுலா எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கும் என டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்குப் பிறகு புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் நேற்று தன் சமூக வலைதள பதிவில் அறிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
"உலக வரலாற்றிலேயே மிகப்பாரிய எண்ணெய் ஒப்பந்தத்தை வெனிசுலா நாட்டுடன் அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ளது" என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மற்றொருபுறம், ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையிலும் முடிவுக்கு வராமல் நீடிப்பதால், எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
எரிசக்தி அழுத்தத்தைச் சமாளிக்க அமெரிக்கா ஏற்கனவே தனது மூலோபாய பெட்ரோலிய இருப்புகளைப் பயன்படுத்தி வருகிறது.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 10 கோடி பேரல்களுக்கு மேல் குறைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த இருப்பு 30 கோடி பேரல்களுக்கும் கீழே சரிந்தது.