

அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது, சாதாரண மக்களின் தேவைகளைப் புறக்கணித்த பெருநிறுவன அரசியலுக்கு ஒரு சக்திவாய்ந்த அடியாகும் என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்ப் உடைய குடியரசு கட்சியை தோற்கடித்து நாடாளுமன்ற (காங்கிரசின்) இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி பெருமான்மையை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ யார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்த வெற்றி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெற்ற மாபெரும் வெற்றி, அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் குடியரசுக் கட்சியின் மக்கள் விரோத நிலைப்பாடுகளுக்கு எதிரான ஒரு தீர்க்கமான தீர்ப்பு என்று கூறினார். கோடீஸ்வரர்களை வழிபடும் கார்ப்பரேட் அரசியலுக்கு 'ப்ளூ வேவ்' (ஜனநாயக கட்சியின் வெற்றி) ஒரு பேரிடி.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாகியுள்ள இந்த அரசியல் இயக்கம், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சாதாரண மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று மம்தானி கூறினார்.
"நாட்டின் கோடீஸ்வரர்கள் கேட்பதையெல்லாம் செய்துவிட்டு, உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று கூறிய அரசியல்வாதிகளுக்கு எதிரான ஒரு பொது வாக்கெடுப்பே இந்தத் தேர்தல்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் இரண்டு ஆண்டுகள் கேட்ட துணை அதிபர் ஜே.டி. வேன்ஸுக்கும் இது ஒரு தெளிவான பதில்" என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், "கோடீஸ்வரர்களின் பணத்திற்கு அடிபணியும் அரசியல்வாதிகளைக் கண்டு அமெரிக்க மக்கள் சோர்வடைந்துவிட்டனர் என்பதை இடைக்காலத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.
அமெரிக்க மக்கள் ஒரு புதிய தலைமுறைக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கும், போர்களுக்கும் குண்டுகளுக்கும் பதிலாக கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும், தங்களை நம்பிய சாமானிய மக்களை ஒருபோதும்கைவிடாமல் இருப்பதற்கும் அடுத்த தலைமுறையே பொறுப்பேற்கும்.
ஆஸ்டின், ஆன் ஆர்பர் அல்லது அஸ்டோரியா என எங்கு இருந்தாலும், உழைக்கும் மக்களே பெரும்பான்மையினர் ஆவர். அமெரிக்க அரசியல் இனி அவர்களை மனதில் கொண்டு முன்னேற வேண்டும்
காலம் தாமதமானாலும், வாடகை, குழந்தை பராமரிப்புச் செலவுகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையைச் சமாளிக்கப் போராடும் சாதாரண மக்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாது.
எனவே, மக்கள் பிரதிநிதிகள், மக்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரமாக உதவிகளை வழங்கத் தயாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.