

9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்தும் பார்ப்போம்.
அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று.
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் ஓசாமா பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பை சேர்ந்த 19 பயங்கரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை கடத்தினர்.
இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதும், மூன்றாவது விமானம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதின.
நான்காவது விமானத்தை பயங்கரவாதிகளிடம் இருந்து அதிலிருந்த பயணிகள் மீட்க முயன்றபோது விமானம் இலக்கை அடையாமல் பென்சில்வேனியாவில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த திட்டமிடப்பட்ட தாக்குதலில் மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான வெளியுறவுக் கொள்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
அல் கொய்தா தலைவர் பின் லேடன் 2011 மே 2 அன்று பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறிப்பித்தக்கது.
9/11 தாக்குதலின் 25வது ஆண்டுகள் நிறைவையொட்டி இவ்வாண்டும் அமெரிக்கா முழுவதும் இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்றும் 'தி கார்டியன்' இதழின் மூத்த பத்திரிகையாளர் ஜேசன் பர்க் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
9/11 தாக்குதல் மூலம் அமெரிக்காவை ஆப்கானிஸ்தான் போருக்குள் இழுத்து, சோவியத் யூனியனுக்கு நேர்ந்தது போல அதன் பொருளாதாரத்தை சீரழிப்பதே பின்லேடனின் திட்டம் எனப் பரவலாகக் கருதப்பட்டது.
ஆனால், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதை பின்லேடன் எதிர்பார்க்கவில்லை என்றும், ஏவுகணைத் தாக்குதல்களோடு அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்றே அவர் தவறாகக் கணக்கிட்டிருந்தார் என்றும் சான்றுகள் காட்டுகின்றன.
அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்தி, மத்திய கிழக்கிலிருந்து அதை வெளியேறச் செய்வதே பின்லேடனின் இலக்காக இருந்தது.
அமெரிக்காவை பொருளாதார ரீதியாக ரத்தம் சிந்த வைப்பதாக 2004ல் பின்லேடன் சவால் விட்டிருந்தார்.
ஆனால் சோவியத் யூனியன் போல அமெரிக்கா வீழவில்லை. மத்திய கிழக்கிலிருந்து தனது படைகளையும் அது முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை.
சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.
9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.
ஆனால், அப்பாவி முஸ்லிம்கள் அதிகளவில் கொல்லப்பட்டதால் அல் கொய்தாவிற்கு எதிராக இஸ்லாமிய உலகிலேயே எதிர்ப்புகள் வலுத்தன.
அமெரிக்கக் கடற்படையால் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு, அல் கொய்தா என்ற பெயரையே மாற்றும் அளவிற்கு அமைப்பின் பெயர் சீரழிந்திருந்தது.
அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கு 2019க்குப் பிறகு பெருமளவு சரிந்துவிட்டது.
தற்போது ஆப்பிரிக்காவின் பலவீனமான மற்றும் அரசு நிர்வாகமற்ற எல்லைப் பகுதிகளிலேயே இவர்களின் செயல்பாடு சுருங்கியுள்ளது.
அன்றைய அல் கொய்தா அமைப்போடு ஒப்பிடும்போது, தற்போதைய பயங்கரவாத குழுக்களிடம் கரிஸ்மாடிக் தலைவர்கள் எவரும் இல்லை.
அமெரிக்காவின் நவீன கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறன்களால் அத்தகைய தலைவர்கள் உடனடியாக அழிக்கப்படுவதும் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வர முக்கிய காரணமாகும்.
ஒரு பயங்கரவாத அமைப்பு அழியாமல் உயிர்ப்புடன் இருப்பது மட்டுமே அதன் வெற்றியாகிவிடாது.
25 ஆண்டுகள் கடந்த நிலையில் அல் கொய்தா இன்னும் இயங்கினாலும், பின்லேடனின் உலகளாவிய கனவுகள் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டன என்பதே நிதர்சனம் என தெரிவித்துள்ளார்.