கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு சராசரியாக 140.5 பில்லியன் டன் பனியை இழந்து வந்த அண்டார்டிகா கண்டம், சமீபத்தில் தற்காலிகமாக தனது போக்கை மாற்றி, 2021 முதல் 2023 வரையிலான 22 மாதங்களில் அதிக அளவாக 695 பில்லியன் டன் பனியைப் பெற்றுள்ளது.
வெப்பமண்டல கடல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம், அங்கு கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம் என ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
2003 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அண்டார்டிகா தொடர்ந்து பனியை இழந்து கடல் மட்ட உயர்வுக்குக் காரணமாக இருந்தது. ஆனால், ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2023 வரை இந்த பனி இழப்பு முற்றிலும் தலைகீழாக மாறி பனிப்பொழிவு அதிகரித்தது.
இதன் காரணமாக 2021 முதல் 2024 வரையிலான அண்டார்டிகாவின் ஒட்டுமொத்த பனி இழப்பு சமநிலை பூஜ்ஜியம் என்று எட்டியுள்ளது.
இந்த பனி அதிகரிப்பு பெரும்பாலும் கிழக்கு அண்டார்டிகா மற்றும் அண்டார்டிக் தீபகற்பப் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக, குயின் மேரி லேண்ட் மற்றும் வில்கேஸ் லேண்ட் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 470 பில்லியன் டன் பனி சேர்ந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு அண்டார்டிகா பகுதி தொடர்ந்து பனியை இழந்து கொண்டேதான் இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு இடைப்பட்ட வெப்பமண்டல கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வெப்பம் நிலவியது.
இந்த வெப்பம் வளிமண்டலத்தில் 'ராஸ்பி அலைகள்' என்ற காற்று அலைகளை உருவாக்கியது.
இந்த அலைகள் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்து, கிழக்கு அண்டார்டிகா பகுதியில் ஒரு உயர் அழுத்த மண்டலத்தை உருவாக்கின.
இந்த வளிமண்டல மாற்றங்களால், இந்தியப் பெருங்கடலில் இருந்து உருவான ஈரப்பதம் 'வளிமண்டல ஆறுகள்' மூலம் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டு, கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான பனிப்பொழிவாகக் கொட்டியது.
இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இது அண்டார்டிகா பனி உருகுவதில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி அல்ல.
இந்த பனி அதிகரிப்புக்கு மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் வெறும் 9% மட்டுமே காரணம்.
மீதமுள்ள 91% இயற்கையான பருவநிலை மாறுபாடுகளாலேயே நிகழ்ந்துள்ளது.
இத்தகைய கடல் வெப்பமடைதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு தற்காலிக நிகழ்வாகும்.
மேற்கு அண்டார்டிகாவில் கடல் வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகுவது மற்றும் பனி இழப்பு ஏற்படுவது போன்ற நீண்ட காலப் பாதிப்புகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் வெப்பமண்டலப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்கள் கூட அண்டார்டிகாவின் பனிப்பாறைகளைப் பெருமளவில் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
எனினும், உலகளாவிய கடல் மட்ட உயர்வைத் தடுப்பதற்கு இந்த தற்காலிக பனிப்பொழிவு போதுமானது அல்ல என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்