

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், கனகல் மண்டலத்திலுள்ள ஷப்துலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோயா யாதகிரி ரெட்டி. இவரது ஒரே மகள் கோயா ஸ்ரீஜா, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.
அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார், அங்கு 8 தெலுங்கு மாணவர்களுடன் தங்கியுள்ளார். இன்னும் 6 மாதங்களில் அவர் தனது படிப்பை முடிக்க உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ந் தேதி, இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு, அவர் தனது நண்பர்களிடம் நடைப்பயிற்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து அங்குள்ள போலீசில் புகார் அளித்தனர். அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கள் ஒரே மகள் உயர்கல்விக்காக சென்று காணாமல் போனதால் ஸ்ரீஜாவின் பெற்றோர் கண்ணீர் விட்டனர்.
அவர்கள் தெலுங்கான அரசிடம் மகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தெலுங்கானா அரசு இதுகுறித்து அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. மாணவியை கண்டுபிடிக்க அமெரிக்காவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.