ஸ்விட்சர்லாந்து ரேவ் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்; தப்பிய நபரைதேடும் காவல்துறை!

ஹெலிகாப்டர் உதவியுடன் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Switzerland rave party
Published on
Summary

ஆராவ் நகரின் ஷாசென் பகுதியில் நடைபெற்ற ‘ஆராவ் ரேவ்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் அதிகாலை 2:30 மணியளவில் திரளான மக்கள் திரண்டிருந்த சூழலில், திடீரென அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

ஸ்விட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ஆராவ் நகரில் நடைபெற்ற ரேவ் இசை நிகழ்ச்சியில் அதிகாலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்ற இந்த விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.

ஆராவ் நகரின் ஷாசென் பகுதியில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் ‘ஆராவ் ரேவ்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 2:30 மணியளவில் திரளான மக்கள் திரண்டிருந்த சூழலில், திடீரென அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

சிலர் இசை மேடையின் அடியில் ஒளிந்துகொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்காவ் மாகாணக் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

சம்பவம் நடந்த குதிரைப் பந்தய மைதானத்தைச் சுற்றியுள்ள விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் காவல்துறை முழுமையாகத் தனிமைப்படுத்தி முடக்கியுள்ளது. ஹெலிகாப்டர் உதவியுடன் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் யாரும் ஷாசென் பகுதிக்கு வர வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார், அவரது நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. தப்பிச் சென்ற குற்றவாளியைப் பிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக ஏதேனும் புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் வழங்கி உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் ஸ்விட்சர்லாந்தும் ஒன்று என்ற போதிலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அங்கு அரிதாகவே நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com