

ஸ்பெயினில் மாட்ரிட்-அண்டலூசியா வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு அதிவேக ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் 179 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 'ரென்ஃபே' நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரெயிலும், 'இரியோ' நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு அதிவேக ரெயிலும் இந்த விபத்தில் சிக்கின.
இரு ரெயில்களும் அதிவேகத்தில் மோதிக்கொண்டதில், இரியோ ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டதாக கஸ்டில்லா-லா மன்சா பிராந்திய அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விபத்தைத் தொடர்ந்து, மாட்ரிட்-அண்டலூசியா வழித்தடத்திலான அனைத்து அதிவேக ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள உர்தா நகரத்தின் மேயர் மானுவல் காலன் கூறுகையில், விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தேவையான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்ய உள்ளூர் விளையாட்டு அரங்கம் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் வெளியான காட்சிகளில், தடம் புரண்ட ரெயிலின் ஒரு பெட்டி உயரமான மேம்பாலப் பகுதியின் விளிம்பில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருப்பதும், இடிபாடுகள் கீழே சிதறிக் கிடக்கிறது.
ஸ்பெயினில் கடந்த ஜனவரி மாதமும் இதே வழித்தடத்தில், இரண்டு ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விபத்து நடந்து 9 மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. இது ஸ்பெயினின் ரெயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மீதான பெரும் விவாதத்தை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று பங்கேற்கவிருந்த அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஸ்பெயினின் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியும் தங்களது அனைத்து தேர்தல் பிரச்சார நிகழ்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.