

தென் கொரியாவில் தேசிய அளவிலான வரி கணக்காளர் தகுதித் தேர்வில் முதலிடம் பிடித்தவர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேர்வில் முறைகேடு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தென் கொரியாவில் போட்டித் தேர்வுகள் மிகவும் கடினமான ஒன்றாகும். அதில் வெற்றி பெற மாணவர்கள் இரவு பகலாக படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் ஹான் வோன் சியோக் என்ற மாணவர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான முதல் சுற்று வரி கணக்காளர் தேர்வில் 160 கேள்விகளுக்கு 159 சரியான பதில்களை அளித்து, 400 க்கு 397.5 மதிப்பெண்களைப் பெற்றார்.
ஜூலை மாதம் நடந்த இரண்டாம் சுற்று எழுத்துத் தேர்விலும் 800க்கு 663 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
இதனிடையே முதல் சுற்றில் மொத்தம் 160 கேள்விகளில் 159 கேள்விகளுக்கு அவர் சரியான பதில்களை எழுதியது சந்தேகத்தை எழுப்பியது.
இந்நிலையில் யூடியூப் சேனல் காணொளி மூலம் தனது தவறை ஒப்புக்கொண்டார். தான் நேர்மையாக வெற்றி பெறவில்லை என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறினார்.
தேர்வின் போது செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகளை பயன்படுத்தி கேள்விகளைப் புகைப்படம் எடுத்து, ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் தனது கைபேசிக்கு அனுப்பி பதில்களை எழுதியதாக அவர் அந்த வீடியோவில் விளக்கினார்.
மேலும் அவர் தனது வழக்கறிஞர் மூலம் சியோல் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை சமர்ப்பித்தார். இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
இவ்விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
வரும் வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ள வருடாந்திர கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.