ஜப்பானில் பரபரப்பு: குட்டியை பாதுகாக்க காரை மோதித் தாக்கிய தாய் கரடி!

ஒக்கைடோ மாகாணக் காவல்துறை இந்த டேஷ்கேம் காட்சிகளை வெளியிட்டுப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Mother bear
Published on: 

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒக்கைடோ மாகாணத்தின் பிஃபூகா பகுதியில், தன் குட்டியைப் பாதுகாப்பதற்காக தாய் கரடி ஒன்று ஓடும் காரை மோதித் தாக்கிய அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் காரிலிருந்த 'டேஷ்கேம்' கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த மாதம் 29ம் தேதி அன்று இரவு வேளையில், பெண் ஓட்டுநர் ஒருவர் பிஃபூகா நகரின் சாலையில் தன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருண்ட சாலையில் திடீரென இரு கரடிகள் தென்பட்டதால், அவர் காரின் வேகத்தைக் குறைத்து நிறுத்த முயன்றார். அந்த இரண்டு கரடிகளில் ஒன்று தாய் கரடி என்றும், மற்றொன்று அதன் குட்டி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

காரை தாக்கிய தாய் கரடி

சாலையைக் கடக்க முயன்ற தன் குட்டிக்கு காரால் ஆபத்து நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில், தாய் கரடி நிலைகுலைந்து ஆக்ரோஷமடைந்தது. சட்டென்று பாய்ந்து வந்த அந்தக் கரடி, காரின் முன்பகுதியிலும் பக்கவாட்டிலும் தன் உடலால் மிகக் கடுமையாக மோதித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் போது காரின் முன்பகுதியில் சில கீறல்களும் ஓட்டையும் ஏற்பட்டன.

காரில் இருந்த ஓட்டுநர் அச்சத்தில் உறைந்து போன போதிலும், காரை நகர்த்தாமல் அமைதியாக உள்ளேயே இருந்தார். தாக்குதலுக்குப் பிறகு, தாய் கரடி தன் குட்டியுடன் வேகமாகப் பக்கத்திலிருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இந்தக் கரடித் தாக்குதலில் காரின் முன்பகுதி சேதமடைந்தாலும், ஓட்டுநருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என உள்ளூர் காவல்துறையினரும், ஜப்பானின் செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளன.

வனத்துறையின் எச்சரிக்கை

ஒக்கைடோ மாகாணக் காவல்துறை இந்த டேஷ்கேம் காட்சிகளை வெளியிட்டுப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வனவிலங்குகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறும், கரடிகளைக் கண்டால் காரை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com