

நாசா தனது புதிய நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை, கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.
ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தில் எளிதில் கண்களுக்கு புலப்படாமல், தொலைவில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யவும், அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளை பூமிக்கு அனுப்பவும் உள்ளது.
ரோமன் தொலைநோக்கி ஆரம்பத்தில் ஒரு உளவுத் தொலைநோக்கியாக வடிவமைக்கப்பட்டது, பின்னர் நாசாவிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
புகழ்பெற்ற ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியை முன்னெடுத்த நாசாவின் முதல் தலைமை வானியலாளரான நான்சி கிரேஸ் ரோமனின் நினைவாக இதற்கு ‘நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி’ என பெயரிடப்பட்டது.
நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி ஒரு சுற்றுலாப் பேருந்து அளவில் மிகப்பெரியதாக உள்ளது. 8,164 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், தற்போது ஒரு மில்லியன் மைல் பயணத்தில் உள்ளது.
இந்தப் பயணம் விண்வெளியில் உள்ள அதன் புதிய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லும்.
அங்கு, ஹப்பிள் தொலைநோக்கியை விட மிகப் பெரிய பார்வைப் புலத்தைக் கொண்டு, பிரபஞ்சத்தின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்து, கருப்பு ஆற்றல், கருப்புப் பொருள் மற்றும் புறக்கோள்களைப் பற்றி ஆராய, இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்பட உள்ளது.
நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி, இறுதியாக L2 எனப்படும் இரண்டாவது சூரிய-பூமி லாக்ராஞ்ச் புள்ளியைச் சுற்றி அதன் இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இந்தப் புள்ளியில், பூமி மற்றும் சூரியனின் போட்டி ஈர்ப்பு விசைகள், குறைந்தபட்ச எரிபொருளைப் பயன்படுத்தி அதனை நிலையாக வைத்திருக்கும்.
இந்த தொலைநோக்கியின் பார்வைப் திறன் 100 மடங்கு பெரியது, இது ஒரே நேரத்தில் வானத்தின் பெரும் பகுதிகளை உள்ளடக்குவதற்கு உதவும்.
ரோமன் தொலைநோக்கி விண்மீன் திரள்களை ஒன்றாகப் பிணைத்து, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை வரையறுப்பதாகத் தோன்றும் கண்ணுக்குப் புலப்படாத பொருட்களை ஆய்வு செய்ய பயன்பட உள்ளது.
மேலும், ஈர்ப்பு விசையானது நீண்ட தூரங்களுக்கு ஒளியின் பாதையை எவ்வாறு நுட்பமாகப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யவும், ரோமன் தொலைநோக்கி பயன்படுத்தப்பட உள்ளது.
ரோமன் தொலஒநோக்கி சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்களையும் ஆராய உள்ளது. 1990-களில் வானியலாளர்கள் புறக்கோள்களின் இருப்பை உறுதிப்படுத்தியதிலிருந்து, 6,000-க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு கோள் தனது நட்சத்திரத்தின் முன்னால் கடந்து செல்வதால் ஏற்படும் நட்சத்திர ஒளியின் சரிவுகளை நாசா அடையாளம் காணும் என எதிர்பார்க்கிறது.
ரோமன் தொலைநோக்கி, மேம்படுத்தப்பட்ட ஆண்டனாவைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் 1.4 டெராபைட் அளவிலான மூல அறிவியல் தரவுகளை அனுப்பும். இந்தத் தரவுகள் விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தரவுகளை நாசா கிளவுட் அடிப்படையிலான அமைப்பு மூலம் யார் வேண்டுமானாலும் அணுகும்படி செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ரோமன் தொலைநோக்கி அனுப்பும் மூலத் தரவுகளைப் பார்த்து அறிவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.