காலம் மாறிப்போச்சுங்க... ‘ரோபோ’க்கள் கல்யாணமும் பண்ணிக்கிடுது ரோட்டில் பிச்சையும் எடுக்குது

பிச்சை என்று யார் கேட்டால் என்ன? வருவோர் போவோர் காசு பணத்தை போடத்தானே செய்வார்கள். அப்படித்தான் இந்த ரோபோவுக்கும் தினமும் நிறையவே காசு வசூல் ஆகிறதாம்.
பிச்சை எடுக்கும் ரோபோ
Published on: 
Summary

சீனாவில் ஜி1 ரோபோ பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. கியூ ஆர் கோடு மற்றும் ஒலிபெருக்கி மூலம் உதவி கேட்கும் இந்த ரோபோ, தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் பிழைப்புத் தேடல் எந்திரங்களையும் தாண்டி செல்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

ரோபோக்களுமா இப்படி கல்யாணமும் பண்ணிக்கிடுது... பிச்சையும் எடுக்குது... என்று தான் சட்டென்று பார்த்தால் நினைக்க தோன்றும்.

மனிதர்கள் பிச்சை எடுப்பது வாடிக்கையானது. மனிதர்களுக்காக மனிதர்களையும், விலங்குகளையும் பிச்சை எடுக்க வைப்பது ஒரு ரகம். இதை நம்மூரில் கூட பார்க்கலாம். மிகப்பெரிய விலங்கான யானையை கூட கடை கடையாக கொண்டு சென்று பிச்சை எடுக்க வைப்பார்கள்.

கியூ ஆர் கோடு

ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. ஏ.ஐ. தொழில் நுட்பம் வந்து விட்டது. எல்லாமே எந்திர மயமாகி விட்டது. ஆனாலும் பிச்சை எடுக்கும் தொழிலும், பிச்சை எடுக்கும் எண்ணமும் மட்டும் நம்மை விட்டு போகாது போலும்.

சீனாவில் சிஸ்வான் நகரில் ஒரு நிறுவனம் தயாரித்த ஜி1 என்ற மனித வடிவ ரோபோ. இந்த ரோபோதான் இப்போது ரோட்டோரத்தில் நின்று பிச்சை எடுக்கிறது. ரோட்டு ஓரத்தில் விடப்பட்டுள்ள இந்த ரோபோ வருவோர், போவோரை பார்த்து 2 கைகளையும் கூப்பி எனக்கு ரீசார்ஜ் செய்ய பணம் இல்லை. தயவு செய்து ஏதாவது கொடுத்து விட்டு போங்கள் என்று பரிதாபமாக கேட்பது போல் அதில் இணைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் கேட்கிறது. பணம் போடுவதற்காக அந்த ரோபோவின் அடியில் ஒரு தட்டு வைத்துள்ளார்கள். கையில் பணம் இல்லாவிட்டாலும் ஜிபே மூலம் பணம் செலுத்துவதற்கு தனியாக கியூ ஆர் கோடும் வைக்கப்பட்டு உள்ளது.

பிச்சை என்று யார் கேட்டால் என்ன? வருவோர் போவோர் காசு பணத்தை போடத்தானே செய்வார்கள். அப்படித்தான் இந்த ரோபோவுக்கும் தினமும் நிறையவே காசு வசூல் ஆகிறதாம். இதை பார்க்கும் போது ஒன்றுமட்டும் புரிகிறது. பிழைப்பதற்கு மனிதன் ஆயிரம் வழி வைத்து இருக்கிறான். இப்போது இதையும் கூட ஒரு வழியாக கையாளுகிறான். விசித்திரமாக தெரிந்தாலும் வித்தியாசமான இதற்கும் காசு கிடைக்கத்தானே செய்கிறது. தொழில்நுட்பங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி பார்க்கிறார்கள் என்பதற்கு ரோபோக்களுக்கு நடத்தப்பட்ட திருமணம் ஒரு சாட்சி.

ரஷியாவின் மாஸ்கோ நகரில் மணமகனாக வந்த ரோபோவின் பெயர் ராபர்ட். அலுவலக பணியாளர் போல் கோட்-சூட் அணிவிக்கப்பட்டு இருந்தது. கம்பீரமாக மண மேடைக்கு சென்றது. மணமகள் ரோபோவின் பெயர் மடில்டா. பாலே நடன கலைஞர் போல் உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. மணமகளை போல் கலக்கலாக நடனமும் ஆடியபடி வந்தது. 2 ரோபோக்களும் திருமண உறுதிமொழிகளை சொல்லி மோதிரங்களுக்கு பதிலாக வளையல்களையும் பரிமாறிக் கொண்டன. அந்த வளையல்களை உறவுக்காரராக வந்த டாக்மாட்டிக் என்ற ரோபோ எடுத்து கொடுத்தது. திருமணம் மனிதர்கள் நடத்தும் திருமணத்தை போலவே கலகலப்புடன் நடந்து இருக்கிறது.

இந்த காட்சிகளை பார்த்து இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று ஆச்சரியத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com