பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட 101 இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தற்போதைய பங்களாதேஷ் இடைக்கால அரசு மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த மறுஆய்வு ஒப்பந்தங்கள் ரத்து செய்வதற்காக அல்ல என்றும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் (Win-Win) மாற்றுவதற்காகவே என்றும் பங்களாதேஷ் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பங்களாதேஷ் நாடாளுமன்றத்தின் தலைமை கொறடா நூருல் இஸ்லாம் மோனி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவுடன் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக ரத்து செய்யும் திட்டம் பங்களாதேஷ் அரசிற்கு இல்லை.
இந்த ஒப்பந்தங்களில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது பங்காளதேஷின் தேசிய நலனுக்குப் புறம்பான அம்சங்கள் இருக்கிறதா என்பதை மட்டுமே அந்தந்த அமைச்சகங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இதில் ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பிற்கும் சாதகமான முறையில் அவை சரிசெய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நீண்டகாலமாகப் பல முக்கியத் துறைகளில் கூட்டுறவு நிலவி வருகிறது.
தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள முக்கியப் பகுதிகள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இதன் தற்போதைய விதிமுறைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
பங்களாதேஷ் தனது மின்சாரத் தேவைக்காக இந்தியாவின் மின்சார இறக்குமதியையும், எல்லை கடந்த எரிபொருள் விநியோகத்தையும் நம்பியுள்ளது.
பங்களாதேஷில் நிலவும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் நிதியியல் மறுபேச்சுவார்த்தைகள் இதில் அடங்கும்.
இந்தியா நிதியுதவி அளிக்கும் பல திட்டங்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து பங்களாதேஷ் திட்டக்குழு மறுஆய்வு செய்து வருகிறது.
எல்லையில் கடத்தல், சட்டவிரோத ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
முந்தைய அரசின் காலத்தில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் பங்களாதேஷ் மண்ணைப் பயன்படுத்தாமல் தடுக்க இரு நாடுகளும் ஒத்துழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அரசின் இந்த மறுஆய்வு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் டகத் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,
"இது தொடர்பான ஊடகச் செய்திகளை நாங்களும் கவனித்தோம். ஆனால், இதுகுறித்து பங்களாதேஷ் அரசிடமிருந்து இந்தியாவிற்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
எவ்வாறாயினும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு நிச்சயம் எடுக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மறுஆய்வின் முடிவுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பங்களாதேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரு அண்டை நாடுகளின் உறவில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.