

தொலைவில் உள்ள இடி மேகங்களுக்கு மேலே சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமான தூண்கள் போன்ற தீப்பொறிப் பிழம்புகள் தோன்றி மறைவதை இந்த புகைப்படம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
ஸ்பெயின் நாட்டுக்கு கடல் மேல் உள்ள வான் பகுதியில், பயங்கரமான இடியுடன் கூடிய மழையின் போது வானத்திலிருந்து நிலத்தை நோக்கி ராட்சத தூண்கள் போல ஒளிக்கற்றைகள் விழும் அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விசித்திரமான வானிலை காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் புளோரியன் ரியூ என்பவர், கோர்சிகா தீவில் உள்ள கால்வி கிராமத்தின் அருகே இருந்து இந்தத் காட்சியை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். ஸ்பெயின் கடற்கரை பகுதியில் உருவாகவிருந்த இடி-மழை மேகங்களின் நகர்வுகளை முன்கூட்டியே கணித்து, சரியான கோணத்தில் கணக்கிட்டு அவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். தொலைவில் உள்ள இடி மேகங்களுக்கு மேலே சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமான தூண்கள் போன்ற தீப்பொறிப் பிழம்புகள் தோன்றி மறைவதை இந்த புகைப்படம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இவை வளிமண்டலத்தின் மேல் பகுதியில் நிகழும் மின்சார தொடர்பான ஒருவித அரிய நிகழ்வாகும். சக்திவாய்ந்த இடி-மழையின் உச்சத்தில், வளிமண்டலத்தின் மின் சமநிலை காரணமாக இந்த ரெட் ஸ்பிரைட்ஸ் எனப்படும் சிவப்பு நிற ஒளிரும் தூண்கள் உருவாகின்றன. இவை சாதாரண மின்னலைப் போல பூமிக்கு வருவதில்லை மாறாக மேகங்களுக்கு மேலே பல கிலோமீட்டர் உயரத்திற்கு மேல் நோக்கிப் பாயும் அல்லது பிரம்மாண்ட தூண்கள் போல ஒளிரும் தன்மைக் கொண்டவை.
இந்த அரிய நிகழ்வை கேமராவில் பிடிப்பது சாதாரணமானதல்ல. புளோரியன் ரியூ பல்வேறு இடங்களில் இருந்து இடி மேகங்களின் அமைப்பையும், பார்க்கும் கோணத்தையும் பல மணிநேரம் ஆராய்ச்சி செய்து மிகவும் துல்லியமாக இந்தப் புகைப்படத்தை சாத்தியப்படுத்தியுள்ளார். விண்வெளி மற்றும் வானிலை ஆய்வு ஆர்வலர்கள் மத்தியில் இந்த புகைப்படம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், அறிவியல் உலகத்திற்கும் வானிலையை புரிந்துகொள்ள இது ஒரு முக்கியமான காட்சியாக அமைந்துள்ளது.