கிழக்கு எகிப்தில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இஸ்ரேலிலும் அதிர்வை உணர்ந்த மக்கள்!

சூயஸ் பகுதியில் ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் லேசான காயமடைந்தார்.
Eastern Egypt
Published on

கிழக்கு எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதிக்கு வடக்கே 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் கடுமையான பீதியடைந்தனர். இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான இஸ்ரேல் வரை உணரப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எகிப்தின் வானியல் மற்றும் புவி இயற்பியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி, சூயஸ் நகருக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 8 முதல் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வடக்கு கெய்ரோவில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து 3 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சூயஸ் பகுதியில் ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் லேசான காயமடைந்தார். பெருமளவில் பெரிய உயிர்ச்சேதமோ, அல்லது பெரிய கட்டமைப்பு சேதங்களோ இதுவரை அறிக்கையிடப்படவில்லை.

அதிர்வுகள் உணரப்பட்ட பகுதிகள்:

தலைநகர் கெய்ரோ, சினாய் தீபகற்பம் மற்றும் காசா எல்லைப் பகுதியான எல்-அரிஷ் வரை அதிர்வுகள் பலமாக உணரப்பட்டன. மேலும் இஸ்ரேலின் பீர்ஷெபா, ஜெருசலேம் நகரின் சில பகுதிகள் மற்றும் ஜோர்டான், லெபனான் நாடுகளிலும் அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவசரநிலை பிரகடனம்:

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எகிப்திய சுகாதார அமைச்சர் காலித் அப்தெல் கஃபார், நாடு தழுவிய அவசரக்கால செயல்பாட்டுத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிஉயர் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்களை விட்டு விலகி பாதுகாப்பாக இருக்குமாறு எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு எச்சரிக்கை:

நிலநடுக்கத்தின் போது இஸ்ரேல் மக்களுக்கு மொபைல் போன்களில் நிலநடுக்க எச்சரிக்கை வந்தது. இந்த எச்சரிக்கை இஸ்ரேல் ராணுவத்தின் 'ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட்' பாதுகாப்பு அமைப்பால் அனுப்பப்படவில்லை என்றும், கூகுளின் 'ஆண்ட்ராய்டு' தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் அனுப்பப்பட்டது என்றும் இஸ்ரேல் புவியியல் ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் பல ஆண்ட்ராய்டு போன்கள் அதிர்வுக்குள்ளானதை உணர்ந்த கூகுள் சென்சார்கள், நிலநடுக்கம் எனத் தவறாகக் கணித்து மக்களுக்கு எச்சரிக்கை மெசேஜை அனுப்பியுள்ளன. இஸ்ரேலின் சொந்த எச்சரிக்கை அமைப்பான 'த்ரூஆ' நிலநடுக்கத்தைக் கண்டறிந்த போதிலும், அது எல்லைக்கு அப்பால் நடந்த குறைந்த தீவிரமுடைய நிலநடுக்கம் என்பதால் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிடவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com