

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போர்களுக்கு மதத்தின் பெயரால் நியாயம் கற்பிப்பதை போப் லியோ XIV கடுமையாக கண்டித்துள்ளார். "புனித போர் என்று எதுவும் இல்லை; அமைதி மட்டுமே புனிதமானது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் மலைப்பகுதி நகரமான அசிசியில் மத தலைவர்கள் பங்கேற்ற அமைதி கூட்டத்தில், காணொளி வாயிலாக உரையாற்றியபோது போப் லியோ XIV இவ்வாறு கூறினார்.
இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்க திட்டமிட்டிருந்த போப், அக்டோபர் 13-ஆம் தேதி மேற்கொண்ட நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருவதால் தனது பயணத்தை ரத்து செய்தார். இதையடுத்து, அவரது உரை காணொளி மூலம் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த கூட்டத்தில் உலகளாவிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் ஆன்மிக தலைவரான கேன்டர்பரி பேராயர் சாரா முல்லாலி உள்ளிட்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த மத தலைவர்களும் பங்கேற்றனர்.
அமைதியை வலியுறுத்திய புனித பிரான்சிஸ் பிறந்த ஊரான அசிசியில் நடைபெற்ற இந்த கூட்டம், மதங்களுக்கு இடையிலான அமைதி முயற்சியின் 40-ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 1986-ஆம் ஆண்டு அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க மதங்களுக்கு இடையிலான அமைதி கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அமைந்தது.
போப் லியோ வலியுறுத்தல்:
தனது உரையில், சர்வதேச அரசியலில் போரை ஒரு கருவியாக பயன்படுத்தும் போக்கு மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக போப் குறிப்பிட்டார். மேலும், போர்களுக்கு மதத்தின் பெயரால் நியாயம் கற்பிக்கும் தலைவர்களின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார்.
"அதிகாரத்தை முன்னிறுத்தும் கலாசாரம் மேலோங்கி வரும் இன்றைய காலகட்டத்தில், அசிசியின் அமைதி உணர்வை நாம் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். கடவுளின் பெயரால் ஒருபோதும் போர் நடத்தப்பட கூடாது. மேலும் பல போர்களுக்கு தயாராகாமல், உலகின் அனைத்து இடங்களிலும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட நாம் பாடுபட வேண்டும்," என்று போப் லியோ XIV வலியுறுத்தினார்.