

இந்துக்களின் மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிகரித்தாலும், உலக மக்கள்தொகையில் அவர்களின் விகிதாச்சாரம் 2070-ம் ஆண்டில் 13.6 சதவீதமாக குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பியூ ஆராய்ச்சி மையம், உலகில் மத ரீதியான மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் 2035-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் இருக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையம் தனது ஆய்வில் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த ஆய்வில் கூறி இருப்பதாவது:-
2020-ம் ஆண்டில் உலகில் 227 கோடி கிறிஸ்தவர்களும், 202 கோடி முஸ்லிம்களும் இருந்தனர். 2035-ம் ஆண்டிற்குள், முஸ்லிம் மக்கள்தொகை 257 கோடியை எட்டும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 252 கோடியாக இருக்கும். இதன்மூலம் 2035-ம் ஆண்டுக்குள் கிறிஸ்தவர்களை முந்தி உலகின் பெரிய மதமாக இஸ்லாம் இருக்கும்.
2070-ம் ஆண்டுக்குள் முஸ்லிம்கள் எண்ணிக்கை 360 கோடியைத் தாண்டும். கிறிஸ்தவர்கள் 300 கோடிக்கும் சற்று குறைவாக இருப்பார்கள். 2020-2025-ம் ஆண்டு காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் சராசரியாக 3.1 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
அதே சமயம் கிறிஸ்தவப் பெண்கள் சராசரியாக 2.5 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். பிற மதக் குழுக்களைச் சேர்ந்த பெண்களின் சராசரி எண்ணிக்கை 1.6 ஆக இருந்தது.
உலக மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 26 சதவீதத்தில் இருந்து 2070-ம் ஆண்டில் 37 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 29 சதவீதமாக இருக்கும். 2070-ம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடிக்கும். அதனைத் தொடர்ந்து இந்தியா, நைஜீரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக 'பியூ' அமைப்பின் ஆய்வாளர் கான்ராட் ஹேக்கெட் கூறும்போது, மத மாற்றம் மற்றும் மத அடையாளத்தில் ஏற்படும் பிற மாற்றங்களை விட, பிறப்பு விகிதங்களே முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளன என்றார்.
தற்போது அமெரிக்க மக்கள்தொகையில் 62 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாக உள்ளனர். 2065-ம் ஆண்டிற்குள் இவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறையும். இதேபோன்ற நிலைதான் கனடாவிலும் ஏற்படும்.
இந்துக்களின் மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிகரித்தாலும், உலக மக்கள்தொகையில் அவர்களின் விகிதாச்சாரம் 2070-ம் ஆண்டில் 13.6 சதவீதமாக குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்தவொரு மதத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 2070-ம் ஆண்டிற்குள் 17 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.