

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், தேர்லில் களம் இறங்கி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இனசாப் (PTI) என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, இம்ரான் கான் பிரதமர் ஆனார்.
2022-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருந்து வருகுிறார். இவருடைய மனைவி புஷ்ரா பிபியும் சிறையில் உள்ளார்.
இருவரும் ஒரே ஜெயிலில் அடைக்கப்பட்டாலும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். யாரும் அவர்களை சந்திக்க முடியாது. இம்ரான் கான் கூட, தனது மனைவியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறைச்சாலையில் இம்ரான் கான் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. குறிப்பாக அவர் கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் கண் பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், புஷ்ரா பிபியின் மகள் முபாஷரா கவார் மனேகா தனிமைச் சிறைவாசத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் "சிறைச்சாலை விதிப்படி இம்ரான் கானின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த அனுமதிக்க வேண்டும். இம்ரான் கான் மற்றும் அவரது மகன் டெலிபோனில் பேச அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
இம்ரான் கானுக்கு படிக்க செய்தித்தாள்கள் வழங்கப்பட வேண்டும். தினந்தோறும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சிறைச்சாலை விதிப்படி அவருக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான் கான்- புஷாரா பிபி நேருக்கு நேர் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கியுள்ளது.