பூமியின் உயிர்க்கவசமான ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1987-ஆம் ஆண்டு மாண்ட்ரியல் உடன்படிக்கை கையெழுத்தான தினத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி சர்வதேச ஓசோன் படல பாதுகாப்பு தினமாக உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான சர்வதேச ஓசோன் தினம் "பூமியை குளிர்விக்க உலகளாவிய நடவடிக்கை" என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க 'கிகாலி திருத்தம்' கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டின் மையக்கருத்து அதனைச் சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பூர்வமான கொள்கைகள், அனைத்து நாடுகளின் பங்களிப்பு மற்றும் முறையான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் வேதிப்பொருட்களை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் என்பதை இந்த உடன்படிக்கை நிரூபித்துக் காட்டியுள்ளது.
2016 அக்டோபர் 15 அன்று ருவாண்டாவின் கிகாலி நகரில் நடந்த மாநாட்டில், புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான வலிமைமிக்க பசுமை இல்ல வாயுக்களான ஹைட்ரோபுளோரோகார்பன்களை படிப்படியாகக் குறைக்க நாடுகள் ஒப்புக்கொண்டன.
கடந்த 10 ஆண்டுகளில், இந்த கிகாலி திருத்தம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத, ஆற்றல் திறன்மிக்க குளிர்சாதன தொழில்நுட்பங்களை உருவாக்கவும், உலக வெப்பநிலையைக் குறைக்கவும் பெரும் பங்காற்றியுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்படும் சில வேதிப்பொருட்கள் ஓசோன் படலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, புரோமின் மற்றும் குளோரின் கொண்ட ஹாலோகார்பன்கள்.குளோரோபுளோரோகார்பன்கள், ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள், கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் மெத்தில் புரோமைடு.
இதன் தீவிரத்தை உணர்ந்த சர்வதேச சமூகம், 1985 மார்ச் 22 அன்று 28 நாடுகளின் கையெழுத்துடன் 'வியன்னா மாநாட்டை' நடத்தியது.
அதன் தொடர்ச்சியாகவே 1987 செப்டம்பரில் மாண்ட்ரியல் உடன்படிக்கை வரையறுக்கப்பட்டு, 1994-இல் ஐநா பொதுச்சபையால் இந்தத் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உலக நாடுகள் அனைத்தும் மாண்ட்ரியல் உடன்படிக்கையின் இலக்குகளைச் சரியாகப் பின்பற்றி வருகின்றன. வளரும் நாடுகளில் HCFC-களின் பயன்பாட்டை 2040-க்குள் முழுமையாக நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்/விமானங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு அமைப்புகள் போன்ற மாற்றுப் பொருட்கள் இல்லாத சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தற்காலிக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2009 செப்டம்பர் 16 அன்று, வியன்னா மாநாடு மற்றும் மாண்ட்ரியல் உடன்படிக்கை ஆகிய இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் உடன்படிக்கைகள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.