

பரந்த கடலின் நடுவே, எதிரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பிரம்மாண்ட கப்பல்களில் இருந்த தந்தையும் மகனும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொண்ட அரிய நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாலுமிகளான தந்தையும் மகனும் தங்களது கடல் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக எதிரெதிர் கப்பல்களில் சந்தித்துக் கொண்ட இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை, மகன் ருஷீல் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
ருஷீல் சரண் தனது கப்பலில் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, தொலைவில் மற்றொரு பெரிய கப்பல் தனக்கு எதிரே தெற்கு நோக்கி வருவதை அவர் கவனித்தார்.
வழக்கமான பாதுகாப்பு நடைமுறைப்படி, ரேடார் மற்றும் கடல்சார் கருவிகள் மூலம் அந்த மாற்றுத் திறப்புக் கப்பலின் விவரங்களையும் அதன் பாதையையும் அவர் சரிபார்த்தார்.
அப்போதுதான், தனக்கு எதிரே வந்து கொண்டிருக்கும் அந்தப் பிரம்மாண்ட கப்பலின் கேப்டனாக தனது தந்தை பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை ருஷீலுக்குத் தெரியவந்தது.
நிலப்பரப்பில் இருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால், பரந்த நீர்ப்பரப்பின் நடுவே இந்த அபூர்வ சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தங்கள் இருவரின் பயணமும் இப்படி ஒரே புள்ளியில் இணையும் என்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிடவில்லை.
இந்த மறக்க முடியாத தருணம் குறித்து ருஷீல் தனது பதிவில் குறிப்பிட்டதாவது, "கோடியில் ஒரு பங்கு சாத்தியம் மட்டுமே உள்ள இந்த அரிய வாய்ப்பு, கடலின் நடுவே என்னையும் எனது தந்தையையும் இணைத்துள்ளது.
இரண்டு தலைமுறை மாலுமிகள், இருவேறு கப்பல்கள், இருவேறு பயணங்கள்... ஆனால், கடலின் நடுவே ஒரே ஒரு மறக்க முடியாத தருணம்!"
வாழ்க்கையில் தாங்கள் இருவருமே கடல்சார் துறையைத் தேர்ந்தெடுத்து, வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், இந்த பரந்த பெருங்கடல் தங்களை ஒன்று சேர்த்துள்ளது தனக்கு ஆழ்ந்த அர்த்தத்தைத் தந்துள்ளதாக ருஷீல் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது.
மகனைக் கண்டதும் அந்தத் தந்தையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் பார்ப்போரைக் கண் கலங்கச் செய்துள்ளது.
இணையவாசி ஒருவர், 'ஒரு மாலுமியின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிக அரிய தருணங்களில் இதுவும் ஒன்று' என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், 'நீங்கள் உங்கள் சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம், ஆனால் வாழ்க்கையை எப்படி வழிநடத்த வேண்டும் என்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்த நபருடன் நீங்கள் பயணிப்பதை ஒரு போதும் நிறுத்த மாட்டீர்கள்' என்று தத்துவதோடு பதிவிட்டுள்ளார்.
கடல்சார் குடும்பத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், "இது மிகவும் அழகான தருணம்! எனது கணவர் சீஃப் ஆபீசராகவும், அவருடைய மாமா கேப்டனாகவும் இருந்தபோது இதே போன்ற ஒரு சந்திப்பு ஒரே ஒரு நாள் மட்டும் ஒரே துறைமுகத்தில் எங்களுக்கும் நிகழ்ந்தது. இருவருக்கும் பாதுகாப்பான கடல் பயணம் அமைய வாழ்த்துகிறேன்" என்ற தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
கடல் பயணங்கள் குடும்பங்களை மாதக்கணக்கில் பிரித்து வைக்கும் சூழலில், நடுக்கடலில் தந்தை மற்றும் மகன் தங்களது கப்பல்களை அருகே நிறுத்தி, கை அசைத்துச் சந்தித்துக் கொண்ட இந்த வீடியோ இணையத்தின் ஆகச்சிறந்த "Wholesome" தருணமாக மாறியுள்ளது.