என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் வர டிரம்ப் ஆதரவு: நிர்வாகக் குழு மறுப்பு

செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கை உலகின் மிகவும் புத்திசாலித்தனமான நபர் என பாராட்டினார்.
 Jensen Huang-Trump
Published on: 
Summary

இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தயுள்ளார். ஆனால், நிறுவனத்தின் வாரியம் அவரை ஏற்க மறுத்து உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீண்டும் அந்தப் பொறுப்புக்குத் திரும்புவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். தனிப்பட்ட சர்ச்சைகள் மற்றும் உளவுத்துறை சந்தேகங்கள் காரணமாக பதவி விலகிய ஜென்சன் ஹுவாங்கிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் பணியாற்ற இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

சுமார் 33 ஆண்டுகளாக என்விடியாவை வழிநடத்தி, செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதை மிகப்பெரிய சக்தியாக மாற்றிய இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங், கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். திருமணத்தை மீறிய உறவுகளில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது.

அதிலும் குறிப்பாக, இச்சர்ச்சையில் தொடர்புடைய ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் சீன உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் அமெரிக்க உளவு அமைப்புகளால் எழுப்பப்பட்டன. வெளிநாட்டு உளவு அமைப்பு மூலம் ஹுவாங் குறிவைக்கப்பட்டாரா என்பது குறித்து என்விடியா வாரியம் சுயாதீன விசாரணை நடத்தியது. இருப்பினும், நிறுவனத்தின் ரகசியத் தகவல்களோ அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்போ பாதிக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவனம் தெரிவித்தது.

டிரம்ப் கருத்து

செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கை உலகின் மிகவும் புத்திசாலித்தனமான நபர் என பாராட்டினார். அவர் தவறான சில முடிவுகளை எடுத்திருந்தாலும், ஒரு பெரிய மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வருவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அமெரிக்கா இரண்டாவது வாய்ப்புகளை வழங்கும் நாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின் போதும் ஹுவாங்கின் திறமை குறித்துப் பேசியதாக ட்ரம்ப் தெரிவித்தார். மறுபுறம், எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைப் பிரமுகர்கள் மற்றும் சுமார் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு மூலம் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நிறுவன வாரியம் விரும்பினால் மீண்டும் தலைமைப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக ஹுவாங்கும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

என்விடியா திட்டவட்ட மறுப்பு

டிரம்ப் மற்றும் தொழில்நுட்பத் துறையினரின் ஆதரவு இருந்தபோதிலும், ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கும் திட்டம் இல்லை என்பதில் என்விடியா வாரியம் உறுதியாக உள்ளது. அவரது நடத்தை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறியதாக வாரியத் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் சுட்டிக்காட்டினார்.

தற்போது தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். புதிய நிரந்தரத் தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஊழியர்கள் மத்தியில் நிலவும் கவலைகளைப் போக்க ஊதிய உயர்வு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை மாற்றம் ஆகியவற்றுக்கு இடையே, நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல என்விடியா நிர்வாகம் முயன்று வருகிறது.

X