வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் அஞ்சலி

இந்த நிகழ்வில் அவரது மனைவி ரி சோல்-ஜூ, மகள் கிம் ஜூ-ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.
North Korea's 81st Liberation Day
Published on

1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரிய தீபகற்பம் விடுதலை பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் வடகொரியாவில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 'தாயக விடுதலை நாள்' பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. 81-வது விடுதலை முன்னிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் வித்திட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி

தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள தேசோங்சான் புரட்சித் தியாகிகள் நினைவிடத்திற்கு அதிபர் கிம் ஜோங் உன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அவரது மனைவி ரி சோல்-ஜூ, மகள் கிம் ஜூ-ஏ மற்றும் வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம்

நினைவஞ்சலிக்குப் பிறகு பேசிய அதிபர் கிம் ஜோங் உன், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ரத்தம் சிந்திப் போராடிய முதல்கட்ட புரட்சியாளர்களின் தளராத மன உறுதியும் தியாகமுமே வடகொரியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் முதன்மை ஆணிவேராக விளங்குவதாகக் குறிப்பிட்டதுடன், அந்தப் போராட்ட உணர்வு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

புதினின் வாழ்த்து செய்தி

தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரின் போது கொரிய விடுதலையில் பங்குவகித்து உயிர்த்தியாகம் செய்த சோவியத் யூனியன் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள விடுதலை நினைவிடத்திற்கும் கிம் ஜோங் உன் சென்று மரியாதை செலுத்தினார். இதனிடையே, வடகொரியாவின் 81-வது விடுதலை நாளை முன்னிட்டு ரஷிய அதிபர் விளாமிர் புதின், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் சுட்டிக்காட்டி தனது அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com