இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

இந்தியா உடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம் இல்லை என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள்
Published on

இந்தியா- நியூசிலாந்து இடையில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கையெழுத்து ஆனது. இந்த ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இதில் உறுதியாக இருந்தார்.

இது தொடர்பான மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய உடனான வர்த்தக ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது:-

இந்தியா உடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம் இல்லை என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள். நன்று, இன்று நாடாளுமன்ற இறுதி வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தம் மசோதா நிறைவேறியது. இது நிகழ்ந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலம், அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் நியூசிலாந்துக்கு கிடைக்கும். 140 கோடி இந்திய நுகர்வோர் நியூசிலாந்து பொருட்களை விற்பனை செய்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.

அடுத்த மாதத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பொருட்களுக்கு வரி இல்லை

டெக்ஸ்டைல்ஸ், தோல், காலணி, ஜூவல்லரி, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை வரியில்லாமல் நியூசிலாந்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும்.

மறுபுறம், இருதரப்பு வர்த்தக மதிப்பில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய நியூசிலாந்தின் 70 சதவீத கட்டணப் பிரிவுகளுக்கு (tariff lines) இந்தியா கட்டண தளர்வை வழங்கியுள்ளது. அதேவேளையில், 29.97 சதவீத தயாரிப்பு வகைகளை இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே வைத்துள்ளது.

பால் பொருட்களுக்கு இந்தியா விலக்கு அளிக்கவில்லை

ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே உள்ள தயாரிப்புகளில் பால் பொருட்கள் (பால், க்ரீம், வே (whey), தயிர், சீஸ்), விலங்கு சார்ந்த பொருட்கள் (செம்மறி ஆட்டு இறைச்சி தவிர), விவசாயப் பொருட்கள் (வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, சோளம், பாதாம்), சர்க்கரை, செயற்கைத் தேன், விலங்கு/தாவர/நுண்ணுயிர் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தாமிரம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (கேத்தோடுகள், கார்ட்ரிட்ஜ்கள், தண்டுகள், கம்பிகள், சுருள்கள்), அலுமினியம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (இங்காட்கள், பில்லட்டுகள், கம்பித் தண்டுகள்) ஆகியவை அடங்கும்.

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு இந்தியா வரி இல்லாத அனுமதியை வழங்கும். இதில் மரக்கட்டைகள், coking coal, உலோகக் கழிவுகள் மற்றும் ஸ்கிராப், மரம், செம்மறி ஆட்டு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத தோல் ஆகியவை அடங்கும்.

ஒயினுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும்

அதேபோல பெட்ரோலிய எண்ணெய், மால்ட் சாறு (malt extract), தாவர எண்ணெய்கள், குறிப்பிட்ட சில மின் மற்றும் இயந்திர உபகரணங்கள் மற்றும் பெப்டோன்கள் (peptones) போன்ற பொருட்களுக்கு இந்தியா 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாக வரிகளைக் குறைக்கும்.

கட்டணக் குறைப்புப் பலனைப் பெறும் நியூசிலாந்து தயாரிப்புகளில் ஒயின், மருந்துகள், பாலிமர்கள், அலுமினியம் மற்றும் இரும்பு/எஃகு பொருட்கள் ஆகியவை அடங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com