

ஹாங்காக்கில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்று, தனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதுவகையான யுக்தியை தொடங்கியுள்ளது. இதன்மூலம் வணிக வளாகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்களும், பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங் நகரில் நியூ டெரிட்டரீஸ் என்ற வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கடந்த காலங்களில் பொருட்கள் போதிய அளவில் விற்பனை செய்யப்படாமல் நஷ்டத்தை சந்தித்தன.
இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டி எவ்வாறு பொருட்களை வாங்க வைப்பது என்பது குறித்து, தலைமை வர்த்தக அதிகாரி பெல்லா சோவா பெக்லிம் என்பவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அந்த யோசனையின் அடிப்படையில், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு பதிலாக, முதலில் அவர்களுடன் உரையாடலை தொடங்கி, கடைக்குள் ஈர்க்கும்படி ஊழியர்களிடம் பெல்லா கூறினார்.
அதன்பிறகு கடைக்குள் வந்த வாடிக்கையாளர்களிடம், ‘பெய் பிளேடு’ என்ற பம்பர விளையாட்டு போட்டியை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தினார்.
இந்த பெய் பிளேடு விளையாட்டு, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்து, அதிகளவிலான சிறுவர்கள் கூட்டத்தை வணிக வளாகத்திற்கு ஈர்த்தது.
இந்த விளையாட்டை விளையாடுவதற்காக, மதியம் 2 மணி தொடங்கி இரவு 9 மணி வரை வணிக வளாகத்தில் பல இளைஞர்கள் திரண்டனர். மேலும் அவர்கள் வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுகளையும், பானங்களையும் வாங்கினர்.
வணிக வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இலவச விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுடன் பெற்றோர்களை வரவழைக்க தூண்டியது.
அவ்வாறு குடும்பமாக வரும் நபர்கள், தங்களின் இரவு உணவிற்காக சுமார் 12,000 ரூபாய் வரை செலவழிப்பதாக ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து நாளடைவில் வணிக வளாகத்தில் உணவகங்கள் மற்றும் பொம்மை விற்பனைகளை தாண்டி, லுக்ஃபுக் ஜூவல்லரி போன்ற உயர்தர ஆடம்பர கடைகளும் விரிவடையத் தொடங்கின.
இதேபோன்று பிரின்ஸ் எட்வர்டில் உள்ள பயோனியர் செண்டர் வணிக வளாகத்தில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை கவர்வதற்காக சில பெய் பிளேட் விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்மூலம் தங்கள் வணிக வளாகங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை விற்பனை அதிகரித்ததாக, அந்த மாலின் குத்தகை மேலாளர் எரிக் செங் தெரிவித்தார்.