நேபாள வெள்ளம்: திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உட்பட 3 இந்தியர்கள் மீட்பு

அந்நாட்டிற்கு இந்தியா சுமார் 95 டன் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
Nepal
Published on

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி பஜார் பகுதியிலிருந்து மேலும் மூன்று இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 வயது சிறுவனும் அடங்குவார்.

இதன் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது; அதேவேளையில் 275 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கூடுதல் தகவல்களை பகிர்ந்துகொண்ட வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 1,907 இந்தியர்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று பேர் மீட்பு:

திரிசூலி பஜார் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அந்த மூவர் அபிஜித் சுரேஷ் பவார், தீபிகா அபிஜித் பவார் மற்றும் 5 வயது சமர்த் அபிஜித் பவார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய ஜெய்ஸ்வால், அவர்கள் தாயகம் திரும்புவதற்கான விமான பயண ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து, அந்நாட்டிற்கு இந்தியா சுமார் 95 டன் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மேலும் சில உடல்களை மீட்டதை தொடர்ந்து, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,295-ஆக உயர்ந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5000 பேர் மாயம்:

அவசரகால மீட்புக் குழுக்கள் 12,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, 275 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர். நாங்கள் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். இது தொடர்பாக நேபாள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்," என்று ஜெய்ஸ்வால் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தொடர்ந்து பேசும் போது, "சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சீனாவின் திபெத் பகுதியில் இந்திய பயணிகள் யாரும் இல்லை. நேபாள அரசாங்கம் கோரியுள்ள கூடுதல் தடயவியல் உபகரணங்கள், பெய்லி பாலங்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்," என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com