நேபாள வெள்ளத்தில் மாயமானவர்களின் எண்ணிக்கை 6150-ஆக உயர்வு!

திபெத் பகுதியிலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Nepal Flood
Published on
Summary

திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நேபாளத்தில் அண்மையில் உருவான பிரம்மாண்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 1,000 பெயர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரிடர், நேபாளத்தின் 8 மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளது.

மீட்புப் பணிகளும் உயிரிழப்புகளும்

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவின் காரணமாக ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, இந்த கோர விபத்தில் சிக்கி 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக மீட்புக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ விளக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட விரிவான கள ஆய்வுகளுக்குப் பிறகே மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத் செய்தியாளர்களிடம் கூறும்போது.

"வெள்ளம் பாதித்த அனைத்து மாவட்ட அலுவலகங்களிலிருந்தும் காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான விவரங்களைச் சேகரித்தோம்.

அந்த விபரங்கள் அனைத்தையும் முழுமையாகச் சரிபார்த்த பின்னரே, தற்போது அதிகாரப்பூர்வ தரவுகளைத் திருத்திப் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

திபெத் பகுதியிலும் பாதிப்பு

நேபாள எல்லையை ஒட்டியுள்ள திபெத் பகுதியிலும் இந்த பனிச்சரிவு மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திபெத் பகுதியில் மட்டும் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 519 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அண்டை நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி, சேற்றில் புதைந்த உடல்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com