

பிரேசில் நாட்டின் தெரு ஒன்றில் மின்னல் வேகத்தில் ஒளிக்கீற்று கடந்து சென்ற மர்மமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சி ஏலியன்களின் வருகையா அல்லது இயற்கையின் அதிசயமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் பரானா (Parana) மாநிலத்தில் உள்ள போண்டா கிரோசா (Ponta Grossa) நகரின் ஜார்டிம் சென்டெனாரியோ பகுதியில் கடந்த நவம்பர் 24-ம் தேதி மாலை இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், திடீரென பிரகாசமான ஒளி ஒன்று தெருவின் குறுக்கே அதிவேகமாகச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. சில நொடிகளில் அந்த ஒளி மறைந்துவிடுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு முன்பாக அப்பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சிவப்பு நிற வானிலை எச்சரிக்கையை பிரேசில் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஒளி தோன்றிய சிறிது நேரத்திலேயே கனமழை பெய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மின்னல் அல்லது வளிமண்டல மின்சார நிகழ்வாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர், கண்காணிப்பு கேமராவின் மிக அருகில் பறந்த பூச்சியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்தக் காட்சியை ஆய்வு செய்த உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் டிர்சியு க்ளெம்பா மற்றும் கார்லோஸ் கலாத் ஆகியோர், கேமராவுக்கு மிக அருகில் பறந்த பூச்சிதான் ஒளியாகத் தெரிந்ததாக விளக்கியுள்ளனர்.
ஒரு சாதாரண பூச்சியின் இயக்கம் கூட கண்காணிப்பு கேமராவில் மர்மமான ஒளியாகத் தோன்றலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.