

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
நேற்று ஜேடி வான்ஸ் அழைப்பை அட்டென்ட் செய்து பேசிய பிரதமர் மோடி, முக்கிய துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜே.டி. வேன்ஸ் மற்றும் உஷா வேன்ஸ் தம்பதியருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் மோடி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தம்பதியருக்கு அண்மையில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'அலெக் நீல் வேன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் கவலை தெரிவித்த சில நாட்களில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.
FCRA சட்டத் திருத்தங்கள் மூலம் இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சமய அறக்கட்டளைகளை இந்திய அரசு கையகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அமெரிக்க எம்பி ரைலி மூர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு வியாழக்கிழமையன்று பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், "சட்டமன்ற மற்றும் சட்ட விவகாரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள்" என்றும், அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வெளிநாட்டு நிதி உதவிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டியது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவாயு தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு தடைகள் மற்றும் 100% வரை இறக்குமதி வரிகளைவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியமான மசோதாவிற்கு அமெரிக்க மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முன்னணி 5 நாடுகளுக்குக் கடுமையான தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிக்க இந்த மசோதா அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.
இதில் ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.