ராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் நிலவிய காலகட்டத்தில், AI வழங்கிய தவறான தகவலால் சீனக் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்க முற்பட்டதும், இறுதி நேரத்தில் அது தடுக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சீனக் கப்பல் ஒன்றில் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படும் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்திற்கு ஒரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் அமெரிக்க ராணுவம் மிக வேகமாகச் செயல்பட்டது.
சீனக் கப்பலை வழிமறித்துக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆயுதம் ஏந்திய அமெரிக்க வீரர்கள் கப்பலுக்குள் நுழையத் தயாராகினர்.
ராணுவ விமானங்களும் உடனடியாக விண்ணில் பறக்க விடப்பட்டன.
ஆனால், தாக்குதல் நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அந்தப் புலனாய்வு அறிக்கையை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தபோதுதான், அது ஒரு AI Chatbot மூலம் உருவாக்கப்பட்ட "முற்றிலும் தவறான அறிக்கை" என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹவாயைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த இளம் புலனாய்வு ஆய்வாளர் ஒருவர், சம்பந்தப்பட்ட சீனக் கப்பலின் சரக்கு விவரங்கள் குறித்து ஒரு AI சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த AI சாட்பாட், இணையத்தில் இருந்த பொதுவான தகவல்களையும், அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்து, கப்பலில் இருந்த பொருட்களை தவறாகப் புரிந்துகொண்டு, அவை அணு ஆயுதப் பொருட்கள் என அறிக்கை அளித்துள்ளது. அந்த ஆய்வாளர், AI கொடுத்த தகவல்களை அப்படியே ஒரு முறையான ராணுவப் புலனாய்வு அறிக்கையாக மாற்றி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த தவறான புரிதலால், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே உலகப் போரே மூளும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை, இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியவும், திட்டமிடல்களுக்கும், விநியோகச் சங்கிலி மேலாண்மைக்கும் AI தொழில்நுட்பத்தை மிக வேகமாகப் பரவலாக்கி வருகிறது.
இருப்பினும், இந்தச் சம்பவம் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு AI அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
இதனால், AI தரும் தகவல்களைச் சரிபார்க்க முறையான பொதுவான விதிகள் எதுவும் இல்லை."AI தொழில்நுட்பம் உங்களை ஒரு மோசமான முடிவுக்கு மிக வேகமாக அழைத்துச் செல்லும்" என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
AI கருவிகளைப் பயன்படுத்தும் இளம் ஆய்வாளர்கள், அதன் முடிவுகளைச் சரிபார்க்காமல் அப்படியே நம்பும் போக்கு அதிகரித்து வருகிறது.
சீனக் கப்பல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அது வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே கட்டுப்படுத்த முடியாத பெரும் போராக வெடித்திருக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்தான் என்றாலும், மனிதர்களின் இறுதி முடிவு மற்றும் சரிபார்ப்பு இல்லாமல் ராணுவ இலக்குகளை AI-இடம் ஒப்படைப்பது உலகிற்கே ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.