

வங்கதேசத்தின் புதிய ஜனாதிபதியாக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு வீழ்ச்சியடைந்தது.
அதன்பின் இந்த ஆண்டு பிப்ரவரி 12 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தாரிக் ரஹ்மான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2023இல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு இருந்தபோது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷஹாபுதீன் (76 வயது) தனக்கு கடுமையான உடல்நலக்குறைவு இருப்பதாக அறிவித்து கடந்த ஜூலை 24 அன்று ராஜினாமா செய்தார்.
ஆனால் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான அவர், கடும் அரசியல் அழுத்தத்திற்கு மத்தியிலேயே ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
வங்கதேச அரசியலமைப்புச் சட்டப்படி 90 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 255க்கு 88 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளும் பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நாட்டின் 23வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
எதிர்த்து போட்டியிட்ட ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளரும், LDP கட்சியின் தலைவருமான ஓய்வுபெற்ற கர்னல் ஒலி அகமதுவை (84) தோல்வியை தழுவினார்.
டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றபோது அரசியலில் நுழைந்த ஆலம்கீர், பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியை எதிர்த்து 1969இல் நடந்த மாணவர் எழுச்சியில் முக்கிய தலைவராகச் செயல்பட்டார்.
பின்னர் 1990களின் தொடக்கத்தில் பிஎன்பி கட்சியில் இணைந்தார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய எதிரணி தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். அக்காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்.
அண்மையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001 முதல் 2006 வரை மறைந்த பிஎன்பி தலைவர் கலீதா ஜியா ஆட்சியில் வேளாண்மை, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
2024 ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
மாணவர் போராட்டத்தின்போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்
இருப்பினும், என்ன ஆயினும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசம் திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.