

நைஜீரியாவில் 32 பேரை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது.
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஒண்டோ மாநிலத்தில், 32 பேரை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானப்படை விமானம் ஒன்று நேற்று அன்று விபத்துக்குள்ளானது.
தெற்கு நைஜீரியாவின் பெனின் நகரிலிருந்து லாகோஸுக்குத் தனது தினசரிப் பணியில் சென்று கொண்டிருந்த விமானம், ஒண்டோ மாநிலத்தின் இக்போகோடாவில் விழுந்து நொறுங்கியது என விமானப்படை செய்தித் தொடர்பாளர் எஹிமென் எஜோடாமே தெரிவித்தார்.
விமானத்தில் 25 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்ததாக ராணுவம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஃபெஸ்டஸ் கயாமோ செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்தார்.
கடற்படைத் தளம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு அருகில் ஆறு இருப்பதால், மீட்புக் குழுவினர் படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என செய்தித் தொடர்பாளர் எஹிமென் எஜோடாமே தெரிவித்தார்.
விமானத்தில் இருந்த 32 பேரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வரவில்லை.
இதற்கிடையில், ஆற்றங்கரையில் மக்கள் கூட்டம் கூடியிருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.