இத்தாலி பள்ளிகளில் பர்தா அணிய தடை விதிக்க இத்தாலி பிரதமர் மெலோனி திட்டம்

அவர்களை வரவேற்பதற்கான ஒரே முறையான வழி இதுதான்.
Giorgia Meloni
Published on

வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மற்றும் பள்ளிகளில் பர்தா மற்றும் நிகாப் ஆகியவற்றை அணிவதை தடை செய்வது தொடர்பான நடவடிக்கையை விரைவில் தனது அரசாங்கத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்தார்.

"பள்ளி அமைப்பில் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும்" வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு இத்தாலிய மொழி பாடங்களை கட்டாயமாக்கும் அம்சமும் இந்த நடவடிக்கையில் அடங்கும் என்று, தனது தேசியவாத-பழமைவாத கட்சியான 'பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி'யின் (Brothers of Italy) இளைஞர் அணியினரிடம் மெலோனி கூறினார்.

கலாச்சாரத்தை புரிந்துகொள்ள வேண்டும்:

ரோமில் நடைபெற்ற தேசிய விழா ஒன்றில், கூடியிருந்தவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் பேசுகையில், "இத்தாலிக்கு வந்து இங்கே தங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் எவரும் எங்கள் மொழியை கற்க வேண்டும், எங்கள் கலாச்சாரத்தை புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் எங்கள் விதிகளை மதிக்க வேண்டும். அவர்களை வரவேற்பதற்கான ஒரே முறையான வழி இதுதான்," என்று கூறினார்.

குறிப்பாக, சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடலையும் மறைக்கும் ஆடையான 'பர்தா' மற்றும் மிகவும் பழமைவாத முஸ்லிம் பெண்கள் அணியும், கண்களை தவிர முகத்தின் மற்ற பகுதிகளை மறைக்கும் 'நிகாப்' ஆகியவற்றுக்கான தடை குறித்து மெலோனி குறிப்பிட்டார். ஆனால், சில முஸ்லிம் பெண்கள் அணியும் தலைக்கு அணியும் துணியான 'ஹிஜாப்' பற்றி அவர் குறிப்பிடவில்லை.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இந்த நடவடிக்கை சட்டமாக மாறுவதற்கு 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டியிருக்கும்.

முக்கிய அங்கீகாரம் பெற்ற தலைவர்:

தீவிர வலதுசாரி அரசியல் பின்னணியைக் கொண்ட மெலோனி, குடியேற்றம் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்து வருகிறார். இருப்பினும், பிரதமராக பணியாற்றிய காலத்தில் அவர் அரசியல் ரீதியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளார்; தேசியவாத கொள்கை கொண்ட ஒரு தனித்துவமான அரசியல்வாதியில் இருந்து, ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளிடையே முக்கிய அங்கீகாரம் பெற்ற ஒரு தலைவராக அவர் மாறியுள்ளார்.

அதேவேளையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்னதாக தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் அவர் ஆர்வமாக உள்ளார். அந்த நோக்கத்தை அடையும் வகையிலான பல கொள்கைகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்; இதில் சிறிய மற்றும் நடுத்தர ரக கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான சொத்து வரி விலக்கு போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.

இந்த மாத தொடக்கத்தில், மெலோனியின் பழமைவாத நிர்வாகம், இரண்டாம் உலக போருக்குப் பிறகு இத்தாலியில் நீண்ட காலம் தடையின்றி ஆட்சியில் இருந்த அரசாங்கம் என்ற பெருமையை பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com